பெரியாரின் பேரனே இது நியாயமா?

Wednesday, January 20, 2010




எதிர்கட்சியினரே அமைதியாக இருந்தபோது கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருக்கும் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதியை அடிக்கடி சீண்டுவதும். பின்னர் அவரிடமே சரண்டர் ஆவதும் வழக்கம். மேளதாளம் வாசிப்பவர் என கலைஞரை விமர்சனம் செய்துவிட்டு, இளங்கோவன் பட்டபாடு படாதபாடு.

மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஈரோட்டில், அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இளங்கோவன் கொஞ்ச நாளாக முகவரி இல்லாமல் இருந்து வந்தார். பத்திரிகைகளில் பரபரப்பு பேட்டியோ, நக்கல், நையாண்டி தனமான பேச்சோ இல்லை.

இளங்கோவன் எங்கே இருக்கிறார் என பத்திரிகையாளர்களே தேடிவந்த நிலையில், ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுகிறார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டியதில்லை. இன்னமும் அவரது செயல்கள் பாராட்டத்தக்கவகையில் உள்ளன என மகுடிவாசித்திருக்கிறார்.

இதே மகுடியை ஒரு மாதத்துக்கு முன்பு வாசித்திருந்தால் கூட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கணக்கடங்கா குழுக்களில் ஏதாவது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கலாம். பாவம் காலம் கடந்த யோசனை தான்.

கொஞ்சம் பொறுத்திருங்கள் இளங்கோவன் அவர்களே!. உங்களை போல கலைஞரின் ஞாபகத்துக்கு வந்த அடிவருடிகள் மட்டும் தான் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இன்னமும் சிலர் கலைஞரின் ஞாபகத்துக்கு வரவாய்ப்பு உண்டு அல்லது வரவைக்கப்படவும் வாய்ப்புண்டு. அப்போதாவது உங்களது பெயரும் அக் குழுக்களில் இடம்பெற்றுவிடும்.

எதையும் தைரியமாக, ஆணித்தரமாக, பாமரனுக்கும் புரியம் மொழியில் எளிமையாக பேசி மக்களிடம் விழிப்புணர்வையும், புரட்சியையும் ஏற்படுத்தியவர் பெரியார். தாத்தாவின் பிறகுணங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும், தைரியமான பேச்சு மட்டும் உங்களிடம் இருக்குது என பெரியாரின் பேரன்கள் (தமிழர்கள்) பெருமைபட்டது உண்டு.

மனதில்படும் எதையும் பளிச்சென்றுகூறி வந்த நீங்கள், கருணாநிதிக்கு அடிவருடியாக மாறியதன் ரகசியம் என்ன?. கலைஞரின் சிறப்பாக செயல்படுகிறார்? என திமுக தொண்டன் கூறலாம். அதற்குகூட காரணம் உண்டு. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் கூட திமுக வெற்றி பெற முடியும் என்ற அளவுக்கு தனது சொந்த கட்சியை பலப்படுத்திவிட்டார்.

திமுக தொண்டன் கூற வேண்டிய கூற்றை, பெரியாரின் பேரன் கூறலாமா?. காங்கிரஸ் தொண்டன் என்பதை சற்று மறந்துவிட்டு, நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா? பெரியார் பேரன் மகுடிவாசிக்கலாமா?.

சரி பெரியாரின் பேரனாக உங்களால் கருத்துதெரிவிக்க முடியாது. காரணம் ஊரறிந்த விஷயம். அதை நாங்களும் விட்டுவிடுகிறோம். காங்கிரஸ் தொண்டனாக கூறுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?.

10 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் சுமார் 12 ஆயிரம் துவக்கப்பள்ளிகளை துவக்கி கிராமங்களில் கல்வி்த் தீபத்தை ஏற்றினார். மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி பெல் தொழிற்சாலை, ஆவடி கனரக இயந்திரங்கள் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, சேலம் இருக்கு உருக்காலை, தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை என தமிழகத்தில் தொழில்புரட்சி செய்தார்.

பேச்சிப்பாறை, பெருஞ்சானி அணைகள், பாபநாசம் அணை, பவானிசாகர் அணை, இன்னமும் சில அணைகள் என தமிழகத்தின் நீர்வளத்தை பெருக்கினார். தனது தாய், சகோதரி, குடும்பம் என எதையும் பற்றி யோசிக்காமல், தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் உழைத்தார்.

கலைஞரின் சாதனை என்ன?. மகன அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, இன்னொரு மகன் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, மகள் கனிமொழிக்கு மக்களவை உறுப்பினர் பதவி, பேரன் தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி, மற்றொரு பேரன் கலாநிதிமாறனுக்கு சன் டிவி குழுமம் (சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா டிவி, கே.டிவி, சன் மியூசிக், உதயா,.....), தனக்கு கலைஞர் டிவி.

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு. தமிழர்களை நிரந்தரமாக முன்னேற்ற, பொருளாதாரத்தை வலுப்படுத்த தொலைநோக்காக என்ன செய்தார் கலைஞர்?.



இளங்கோவன் அவர்களே எப்போதும் ஒரே மாதிரி பேசுங்கள். அடிக்கடி நிறம் மாறினால் வேறுபெயர் (பச்சோந்தி) கூறி அழைத்துவிடுவார்கள்

காங்கிரஸ் தொண்டனாக, காமராஜரின் விசுவாசியாக இப்போது கூறுங்கள் இளங்கோவன் அவர்களே!. கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?. தப்பி, தடுமாறி பெரியாரின் குடும்பத்தில் பிறந்துவிட்டதால், பெரியாரின் பேரன் என்ற பெருமைமிகுந்த பெயரை காப்பாற்ற சற்று வீரமாக பேசுங்கள். இல்லை முதுகெலும்பு இல்லையென்றால் அமைதியாக இருங்கள்.

பெரியாரின் தோரணையில் சொல்வதென்றால்...ஈர வெங்காயம் இளங்கோவன் அவர்களே கொஞ்சநாள் வாயை பொத்திகிட்டு இருங்க......