Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

களைச் செடியாகும் கற்பகத்தருக்கள்

Tuesday, February 23, 2010

23.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
இந்து புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,​​ ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு.​ தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் ​ கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.​ நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,​​ முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,​​ வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.​ இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.​ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,​​ இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.​ பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.​ இதன் உச்சியில்,​​ கிட்டத்தட்ட 30 -​ 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.​ ​​ ஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.​ இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.​ அரசும்,​​ மக்களும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.​ ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.​ இந்தியாவில்,​​ கேரளம்,​​ கோவா,​​ மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள்,​​ தமிழகத்தில் கன்னியாகுமரி,​​ திருநெல்வேலி,​​ மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.​ ​ இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.​ 1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம்.​ அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும்,​​ நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது.​ ​ உள்நாட்டுப் போரினால் மட்டும்,​​ 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.​ அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,​​ 30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.​ இலங்கையில் இருந்து பதனீர்,​​ கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.​ இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.÷தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.​ பதநீர் விற்பனையை அதிகரித்து,​​ அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.​ ​​ ​ பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு,​​ நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் ​ பனையிலிருந்து பெற முடியும்.​ பொதுவாக,​​ இது வளரும் இடங்களில் எல்லாம்,​​ வசதியற்ற ஏழை மக்களின் ​பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.÷பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர்,​​ பனை வெல்லம் -​ 25 கிலோ,​​ பனங்கற்கண்டு -​ 16 கிலோ,​​ தும்பு -​ 11.4 கிலோ,​​ ஈக்கு -​ 2.25 கிலோ,​​ விறகு -​ 10 கிலோ,​​ ஓலை -​ 10 கிலோ,​​ நார்-​ 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.​ ​ பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,​​ விலங்குகளின் உணவும் அடங்கும்.​ கட்டடப் பொருள்கள்,​​ அலங்காரப் பொருள்கள்,​​ வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.​ ​ முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.​ இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.​ அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து,​​ ஜெர்மனி,​​ பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.​ ​​ ​ அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள்,​​ தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.​ ​​ ​ இதுபோல தமிழுக்கும்,​​ தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்.​ தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,​​ தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.​ ​ ​ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ​(குறிப்பாக தென்மாவட்டங்களில்)​ பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்,​​ பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.​ ​அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.​ இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.​ ​ 21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.​ எனவே,​​ பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,​​ வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.​ ​ மாநில மரம் என்ற வகையிலும்,​​ தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற ​ வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம்.​ ​​ ​ பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் ​ கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது,​​ பனையில் இருந்து ​ கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம்.​ பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.


நன்றி: தினமணி

தமிழனுக்கு பாடம் எடுத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

Saturday, February 20, 2010


நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது மெத்தப்படித்த சில மேதாவி தமிழர்களின் வழக்கமான செயல். அதிலும் சில கோமாளிகள் தங்கிழிஷில் (தமிழ், ஆங்கிலம் கலந்து) பேசி தன்னையும் ஏமாற்றி, பிறரையும் ஏமாற்றுவது இயல்பு. கோவையில் ஒரு அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றது.
மத்திய அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் சார்பில் குளோனிங் மரக்கன்றுகள் வெளியிடும் நிகழ்ச்சி கோவை வனக்கல்லூரி வளாகத்தில் 18.2.2010-ல் நடைபெற்றது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் ஜி.குமாரவேலு, சற்று சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். இதைப்பார்த்த ஜெய்ராம் ரமேஷ், குமாரவேலு தமிழில் பேசுங்கோ எனக்கு புரியம் என்றார்.
இருப்பினும் குமாரவேலு, தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்தார். குமாரவேலுவின் ஆங்கில பேச்சை ஜெய்ராம் ரமேஷால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், தமிழ் பேச்சை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. அமைச்சரின் தலைஅசைப்பு, முகபாவணையில் இருந்து இதை தெளிவாக அறிய முடிந்தது.
சிறப்புவிருந்தினருக்கும் புரியாமல், கூடியிருந்த தமிழ் விவசாயிகளுக்கும் புரியாமல் இதுபோல தங்கிழிஷில் பேசும் தமிழ் கோமாளிகளை என்ன செய்ய? என்ற நியாயமான கேள்விக்கணை கூடியிருந்த விவசாயிகளின் மனதில் இருந்து வெளிவந்ததை காண முடிந்தது.

இந்தியாவின் இரண்டு முகங்கள்

Friday, February 5, 2010

05.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்




உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.

நன்றி: தினமணி