Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

ஒரு கடிதம் விலை ரூ.15,000

Monday, February 15, 2010



பத்திரிகையாளனாக இருப்பதால் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது ஆளும்கட்சி செய்யும் சில தவறுகளை எதிர்கட்சி நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டுவேன்.

ஒரு வாரத்துக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவரை சந்தித்து நீண்டநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவரிடம், கோவை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்களுக்கு எதிரான முடிவுகளை மாநகராட்சி எடுக்கும்போது, அதிமுக கவுன்சிலர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மாநகராட்சியில் தான் இப்படி என்றால், கோவை மாவட்டத்திலும் இதுபோல இதுபோல பல மக்கள்விரோத பிரச்னைகள் நடைபெறுகின்றன. இப் பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தினால் அதிமுகவுக்கு ஆதரவு கூடுமே?. உங்கள் மாவட்டச் செயலர் செ.ம.வேலுச்சாமி எம்.எல்.ஏ.விடம் இதுபற்றி பேசக்கூடாதா? என வினவினேன்.

என்ன சார் நீங்க. மாவட்டச் செயலரிடம் பலமுறை பல பிரச்னைகளை கூறிவிட்டோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடையொட்டி சுமார் 3,000 வீடுகள் ஏழைகளுக்கு கட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது என கருணாநிதி பொய் தகவல் கூறும்போதுகூட செ.ம.வேலுச்சாமியிடம் கூறினேன். அம்மாவிடம் (ஜெயலலிதா) தகவல் தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தலாம் என்றேன். அவரோ கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை.

சரி கட்சியில் மூத்த உறுப்பினராக இருக்கும் நீங்களாவது இதை உங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கக்கூடாதா? என்றதும் அவரிடம் இருந்த வந்த பதிலை கண்டு எனக்கே சற்று அதிர்ச்சி ஏற்பட்டது.

இதோ அவரது பதில் இதுதான்: கடிதம் அனுப்பலாம். புகார் அனுப்பலாம். ஆனால் அது அம்மா பார்வைக்கு நிச்சயம் போகாது. அவருக்கு செல்வதற்கு முன்பே செ.ம.வேலுச்சாமிக்கு தகவல் வந்துவிடும், உங்கள மாவட்டத்தில் இருந்து புகார் கடிதம் வந்துள்ளது என்று. அடுத்து என்ன; அடுத்தமுறை சென்னைக்குச் சென்றதும் ரூ.15,000 கொடுத்தால் போதும் கடிதம் செ.ம.வேலுச்சாமியின் கைக்கு வந்துவிடும்.

கோவை மாவட்டச் செயலர் மட்டும் தான் இதுபோன்ற சாமர்த்தியவாதி என நீங்கள் எண்ணிவிட வேண்டாம். இதுபோல வரும் புகார் கடிதங்களை வைத்தே மாதத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யும் கும்பல் போயஸ் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. பின்ன எப்படி சார் அதிமுக ஆட்சிக்கு வர முடியும். இதெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருக்கும் எங்களை போன்ற தொண்டனின் உள்ளக் குமுறல் சார்.


என் பெயர் வெளியில் வராத வகையில் எப்படியாவது இதை வெளிப்படுத்துங்க சார்ன்னு சொன்னார் அந்த கள்ளம் கபடு இல்லா அதிமுக தொண்டர். என்ன பண்ணுறது இருக்கவே இருக்கு. நம்ம வலைப்பதிவு. தாய்த் தமிழக அரசியல் எப்படி இருக்கு பாத்திங்களா உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் சொந்தங்களே?.

உள்கட்சிக்குள் இருக்கும் பிரச்னைக்கே தீர்வுகாண முடியாமல் தவிக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களால், உலகில் பல நாடுகளில் வசிக்கும் தமிழ்ச் சொந்தங்களின் பிரச்னைகளுக்கு எப்படிங்க தீர்வுகாண முடியும்?.

மலேசியாவின் ராஜபக்ஷ நஜீப் டன் ரசாக்

Thursday, February 11, 2010


மலேசிய பிரதமர்


வசந்தகுமார் கிருஷ்ணன்


கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்
மலேசிய நாட்டின் இந்து உரிமை நடவடிக்கை குழு (இன்ட்ராப்) தலைவரும், மலேசிய இந்தியன் குரல் அமைப்பின் ஆலோசகருமான வசந்தகுமார் கிருஷ்ணன் பங்கேற்றார்.

2 ஆண்டுகள் சிறையிலும் பின்னர் வீட்டுக்காவலிலும் இருந்த அவர், முதல்முறையாக வெளிநாட்டு பயணமாக கோவைக்கு வந்திருந்தார். சிறைவாசத்துக்குப்பின் தான் பங்கேற்கும் முதல் மாநாடு தமிழர் பாதுகாப்பு மாநாடு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இனி அவரின் நேர்முகம்:

கேள்வி: இன்ட்ராப் இயக்கம் தோன்றியது ஏன்?

பதில்: மலேசிய நாட்டில் இந்து கோயில்கள் குறிப்பாக தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்ட வருகிறது. இதை தடுக்கவே இன்ட்ராப் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

கேள்வி: மலேசியாவில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது?

பதில்: தமிழர்களின் வளர்ச்சியை மலேசிய அம்னோ கூட்டணி அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியை தடுத்துவிடலாம் என எண்ணி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களுக்கு மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.

கேள்வி: தமிழை குறிவைத்து தடைபோடுதற்கான காரணம் என்ன?.
பதில்: தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவி்ட்டால், அரசியல் ரீதியாக தமிழர்கள் அதிகாரத்துக்கு வருதவதை தடுத்துவிடலாம் என சூழ்ச்சியுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.

கேள்வி: மலேசிய அரசியல் சாசனங்களில் தமிழர்கள் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: மலேசிய அரசியல் சாசன சட்டம் பிரிவு 8-ன்படி மலாய், சீனர், இந்தியர்கள் என அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பிரிவு 12-ன்படி கல்வியில் மூன்று மொழிகளுக்கும் (மலாய், சீனம், தமிழ்) சமஉரிமை
வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் மதிக்காமல் தமிழர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறது மலேசிய அரசு.

தனி ஈழம் ஏன்?

Saturday, February 6, 2010



உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகிறார் மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசியர் இராமசாமி.



கோவையில் சனிக்கிழமை துவங்கிய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ நாடு அமைக்கும் குழுவின் உறுப்பினருமான பேராசியர் முனைவர் இராமசாமி ஆற்றிய உரை:



உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேணஅடிய அவசியம் வந்துள்ளது.

இந்தியாவின் இரண்டு முகங்கள்

Friday, February 5, 2010

05.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்




உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.

நன்றி: தினமணி

பெரியாரின் பேரனே இது நியாயமா?

Wednesday, January 20, 2010




எதிர்கட்சியினரே அமைதியாக இருந்தபோது கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருக்கும் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதியை அடிக்கடி சீண்டுவதும். பின்னர் அவரிடமே சரண்டர் ஆவதும் வழக்கம். மேளதாளம் வாசிப்பவர் என கலைஞரை விமர்சனம் செய்துவிட்டு, இளங்கோவன் பட்டபாடு படாதபாடு.

மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஈரோட்டில், அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இளங்கோவன் கொஞ்ச நாளாக முகவரி இல்லாமல் இருந்து வந்தார். பத்திரிகைகளில் பரபரப்பு பேட்டியோ, நக்கல், நையாண்டி தனமான பேச்சோ இல்லை.

இளங்கோவன் எங்கே இருக்கிறார் என பத்திரிகையாளர்களே தேடிவந்த நிலையில், ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுகிறார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டியதில்லை. இன்னமும் அவரது செயல்கள் பாராட்டத்தக்கவகையில் உள்ளன என மகுடிவாசித்திருக்கிறார்.

இதே மகுடியை ஒரு மாதத்துக்கு முன்பு வாசித்திருந்தால் கூட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கணக்கடங்கா குழுக்களில் ஏதாவது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கலாம். பாவம் காலம் கடந்த யோசனை தான்.

கொஞ்சம் பொறுத்திருங்கள் இளங்கோவன் அவர்களே!. உங்களை போல கலைஞரின் ஞாபகத்துக்கு வந்த அடிவருடிகள் மட்டும் தான் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இன்னமும் சிலர் கலைஞரின் ஞாபகத்துக்கு வரவாய்ப்பு உண்டு அல்லது வரவைக்கப்படவும் வாய்ப்புண்டு. அப்போதாவது உங்களது பெயரும் அக் குழுக்களில் இடம்பெற்றுவிடும்.

எதையும் தைரியமாக, ஆணித்தரமாக, பாமரனுக்கும் புரியம் மொழியில் எளிமையாக பேசி மக்களிடம் விழிப்புணர்வையும், புரட்சியையும் ஏற்படுத்தியவர் பெரியார். தாத்தாவின் பிறகுணங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும், தைரியமான பேச்சு மட்டும் உங்களிடம் இருக்குது என பெரியாரின் பேரன்கள் (தமிழர்கள்) பெருமைபட்டது உண்டு.

மனதில்படும் எதையும் பளிச்சென்றுகூறி வந்த நீங்கள், கருணாநிதிக்கு அடிவருடியாக மாறியதன் ரகசியம் என்ன?. கலைஞரின் சிறப்பாக செயல்படுகிறார்? என திமுக தொண்டன் கூறலாம். அதற்குகூட காரணம் உண்டு. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் கூட திமுக வெற்றி பெற முடியும் என்ற அளவுக்கு தனது சொந்த கட்சியை பலப்படுத்திவிட்டார்.

திமுக தொண்டன் கூற வேண்டிய கூற்றை, பெரியாரின் பேரன் கூறலாமா?. காங்கிரஸ் தொண்டன் என்பதை சற்று மறந்துவிட்டு, நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா? பெரியார் பேரன் மகுடிவாசிக்கலாமா?.

சரி பெரியாரின் பேரனாக உங்களால் கருத்துதெரிவிக்க முடியாது. காரணம் ஊரறிந்த விஷயம். அதை நாங்களும் விட்டுவிடுகிறோம். காங்கிரஸ் தொண்டனாக கூறுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?.

10 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் சுமார் 12 ஆயிரம் துவக்கப்பள்ளிகளை துவக்கி கிராமங்களில் கல்வி்த் தீபத்தை ஏற்றினார். மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி பெல் தொழிற்சாலை, ஆவடி கனரக இயந்திரங்கள் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, சேலம் இருக்கு உருக்காலை, தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை என தமிழகத்தில் தொழில்புரட்சி செய்தார்.

பேச்சிப்பாறை, பெருஞ்சானி அணைகள், பாபநாசம் அணை, பவானிசாகர் அணை, இன்னமும் சில அணைகள் என தமிழகத்தின் நீர்வளத்தை பெருக்கினார். தனது தாய், சகோதரி, குடும்பம் என எதையும் பற்றி யோசிக்காமல், தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் உழைத்தார்.

கலைஞரின் சாதனை என்ன?. மகன அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, இன்னொரு மகன் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, மகள் கனிமொழிக்கு மக்களவை உறுப்பினர் பதவி, பேரன் தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி, மற்றொரு பேரன் கலாநிதிமாறனுக்கு சன் டிவி குழுமம் (சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா டிவி, கே.டிவி, சன் மியூசிக், உதயா,.....), தனக்கு கலைஞர் டிவி.

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு. தமிழர்களை நிரந்தரமாக முன்னேற்ற, பொருளாதாரத்தை வலுப்படுத்த தொலைநோக்காக என்ன செய்தார் கலைஞர்?.



இளங்கோவன் அவர்களே எப்போதும் ஒரே மாதிரி பேசுங்கள். அடிக்கடி நிறம் மாறினால் வேறுபெயர் (பச்சோந்தி) கூறி அழைத்துவிடுவார்கள்

காங்கிரஸ் தொண்டனாக, காமராஜரின் விசுவாசியாக இப்போது கூறுங்கள் இளங்கோவன் அவர்களே!. கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?. தப்பி, தடுமாறி பெரியாரின் குடும்பத்தில் பிறந்துவிட்டதால், பெரியாரின் பேரன் என்ற பெருமைமிகுந்த பெயரை காப்பாற்ற சற்று வீரமாக பேசுங்கள். இல்லை முதுகெலும்பு இல்லையென்றால் அமைதியாக இருங்கள்.

பெரியாரின் தோரணையில் சொல்வதென்றால்...ஈர வெங்காயம் இளங்கோவன் அவர்களே கொஞ்சநாள் வாயை பொத்திகிட்டு இருங்க......

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கலைஞரின் கள்ளக் கணக்கும்!

Thursday, January 7, 2010




தினமணியின் தலையங்கபக்க துணை கட்டுரையில் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கணையுடன் கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் (19-9-2009) உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கலைஞர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஈழத்தில் தமிழர்கள் பரிதாப நிலையில் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாமா? என்ற ஆதங்கம் தமிழ் அறிஞர்களுக்கு. ஆனால், உடன்பிறப்புகளுக்கும், கதர்சட்டைகளுக்கும் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.

கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்காலத்தை (சட்டப்பேரவை தேர்தலை) கணக்கு போட்டு வழக்கம்போல கலைஞர் காய்நகர்த்துகிறார் என்ற கிசுகிசுப்பு கிளம்பியது. உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் உரிய அனுமதி வழங்காததால், உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக 29-9.2009-ல் மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஜனவரியில் நடத்தப்பட இருந்த மாநாடு, ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தநாள் முதல் இதுவரை இது தொடர்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.

இது அவரது சொந்த விருப்பம் அல்லது முதலமைச்சர் என்ற முறையில் அவர் வெளியிடும் அறிவிப்பாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அந்த அறிக்கையி்ன் விவரம்:
கோவையில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் திட்டத்தின்கீழ் கோவை உக்கடத்தில் ரூ.68 கோடி செலவில் 2 ஆயிரத்து 232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அம்மன்குளத்தில் ரூ.50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுதான் அறிக்கையின் சுருக்கம்.

இதை கோவைவாசிகள் (மாநகராட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது மாநகராட்சி தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்) தவிர, பிற மாவட்ட மக்களோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ வாசித்தால் ஆகா கோவைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். உலகத் தமிழ் மாநாடு நடப்பதால் கோடிக்கணக்கான நிதி கிடைக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின்றன. குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம் கோவை நகரமே சொர்க்கம் போல மாறிவிடும் என எண்ணத் தோன்றும்.

இதை உன்னிப்பாக ஆழமாக பார்த்தால் கலைஞரின் கள்ளக்கணக்கு அல்லது கலைஞர் அரசு அதிகாரிகளின் கள்ளக்கணக்கு வெட்டவெளிச்சமாகும்.

ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் கலைஞர் அரசின் திட்டம் அல்ல. இது மத்திய அரசின் கனவுத் திட்டம். ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 1998-ம் ஆண்டு முதல் இத் திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளிலும், பிற மாநிலங்களில் முக்கியமான மாநகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீடு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை இத் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது மத்திய அரசு. மாநில அரசின் பங்கு 20 சதவீதம். மீதமுள்ள 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. கலைஞர் ரூ.118 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்துள்ள அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஓராண்டுக்கு முன்பாகவும் (7-9-2008), உக்கடத்தில் கடந்த மே மாதத்திலும் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இப்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.




அம்மன்குளத்தில் 7.9.2008-ல் பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்


உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் (கலைஞர் அறிவித்த ஒரே வாரத்துக்குள் முளைத்துவிட்டது போலும்)

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை வாரியம் இந்த வீடுகளை கட்டி வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கியதாக எப்படி கணக்கு காட்டுகிறார் கலைஞர்?.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம். குடியிருப்புகள் கட்டத் துவங்கியது ஓராண்டுக்கு முன்பு. மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா கலைஞரே?. மாநாடு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கான நிதியையும் கணக்கு காட்டுவது எதற்காக?. புகழுக்காகவா? பெருமைக்காகவா? கள்ளக்கணக்கு காட்டவா?

உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உருப்படியான திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனில் கிடப்பில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து அதிகமான இடங்களில் சிங்கார சென்னைபோல அழகான மேம்பாலங்கள் (தேவை 10, குறைந்தபட்சம் 5), அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டியது தானே?.

அவற்றையெல்லாம் அறிவித்தால் கலைஞரின் குட்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்துவிடும். அதனால்தான், கண்ணாம்மூச்சு காட்டும் திட்டங்களை மட்டும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.

கோவை சிறையில் உலகத் தரத்துக்கு இணையான தாவரவியல் பூங்கா அமைக்கும் மற்றொரு மெகா மோசடி திட்டத்தையும் அறிவித்துள்ளார் கலைஞர். இப்போது இருக்கும் சிறையை மாற்ற சில காலம் பிடிக்குமாம் (10 ஆண்டுகளோ அல்லது 100 ஆண்டுகளோ தெரியவில்லை). பாதுகாப்பான இடம் வேறு இல்லை என்பது அடுத்த பிரச்னை. கட்டடம் இருக்கும் இடத்தை தவிர காலியாக இருக்கும் 93 ஏக்கரில் (மொத்த பரப்பு 165 ஏக்கர்) தாவரவியல் பூங்காவாம்.

உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சிறை வளாகத்தில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவை எப்படி போய் பார்ப்பது? எப்போது சிறை வேறு இடத்துக்கு மாற்றப்படும்? தாவரவியல் பூங்கா மக்கள் பார்வைக்கு எப்போது திறந்துவிடப்படும்? அத்தைக்கு மீசை எப்போது முளைக்கும்? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்க வேண்டியது தான்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக திட்டங்களை, அதிமுகவும், அதிமுக திட்டங்களை, திமுகவும் தொடராது என்பது எழுத்தப்படாத அரசியல் கோட்பாடு. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்துவிட்டால், கோவை சிறையில் தாவரவியல் பூங்கா என்பது பகல்கனவாகிவிடும்.

உருப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழர்களையும், கோவைவாசிகளையும் திருப்திபடுத்துவதற்கு பதில், கள்ளக் கணக்கு, கானல் நீர் போன்ற திட்டங்களை அறிவித்து கலைஞர் குழம்ப வேண்டாம். தமிழர்களையும் குழப்பவும் வேண்டாம். ஏமாற்றவும் வேண்டாம்.

இப்படிக்கு கலைஞரின் தம்பி....

நெல்லை பொடியன்