தமிழனுக்கு பாடம் எடுத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

Saturday, February 20, 2010


நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது மெத்தப்படித்த சில மேதாவி தமிழர்களின் வழக்கமான செயல். அதிலும் சில கோமாளிகள் தங்கிழிஷில் (தமிழ், ஆங்கிலம் கலந்து) பேசி தன்னையும் ஏமாற்றி, பிறரையும் ஏமாற்றுவது இயல்பு. கோவையில் ஒரு அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றது.
மத்திய அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் சார்பில் குளோனிங் மரக்கன்றுகள் வெளியிடும் நிகழ்ச்சி கோவை வனக்கல்லூரி வளாகத்தில் 18.2.2010-ல் நடைபெற்றது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் ஜி.குமாரவேலு, சற்று சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். இதைப்பார்த்த ஜெய்ராம் ரமேஷ், குமாரவேலு தமிழில் பேசுங்கோ எனக்கு புரியம் என்றார்.
இருப்பினும் குமாரவேலு, தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்தார். குமாரவேலுவின் ஆங்கில பேச்சை ஜெய்ராம் ரமேஷால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், தமிழ் பேச்சை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. அமைச்சரின் தலைஅசைப்பு, முகபாவணையில் இருந்து இதை தெளிவாக அறிய முடிந்தது.
சிறப்புவிருந்தினருக்கும் புரியாமல், கூடியிருந்த தமிழ் விவசாயிகளுக்கும் புரியாமல் இதுபோல தங்கிழிஷில் பேசும் தமிழ் கோமாளிகளை என்ன செய்ய? என்ற நியாயமான கேள்விக்கணை கூடியிருந்த விவசாயிகளின் மனதில் இருந்து வெளிவந்ததை காண முடிந்தது.