தினமணி கதிரில் 28.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்
மலேசியாவில் மக்கள்புரட்சியை ஏற்படுத்தி அரசு பதவியை கைப்பற்றிய முதல் தமிழர். அந்நாட்டின் சுதந்திர வரலாற்றில் உயர்பதவிக்கு வந்த முதல் தமிழர் என்ற முத்திரையை பதித்தவர். குடும்பம், அரசியல், பண பலம் உள்ளிட்ட எவ்வித பின்புலமும் இன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அந்தப் புரட்சித் தமிழர். விடுதலைப்புலிகளின் முதல்நிலை தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தவர். மலேசிய தமிழர்களால் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல்கொடுத்து வருபவர். அவர் தான் பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி.நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக இருக்கும் ராமசாமி, இப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். கோவையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்திருந்தார் ராமசாமி. கோவையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை பேட்டிக்காக அணுகினோம்.எளிமையான உடையில் சாதாரண மனிதனைப் போல காட்சி... அவரிடமோ விசாலமான பார்வை, தொலைநோக்கு எண்ணம் பளிச்சிட்டது. இனி அவரிடம் பேசியதிலிருந்து..
அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான், மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன். மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன். இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன். ஆனாலும், அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை. நேரு, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன். மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.