அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான், மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன். மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன். இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன். ஆனாலும், அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை. நேரு, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன். மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.
தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள்!
Monday, March 1, 2010
அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான், மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன். மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன். இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன். ஆனாலும், அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை. நேரு, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன். மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.
Posted by
நெல்லை பொடியன்
at
10:38 PM
1 comments
Labels: தமிழர்கள், தமிழ், பேராசிரியர் ராமசாமி, மலேசியா
களைச் செடியாகும் கற்பகத்தருக்கள்
Tuesday, February 23, 2010
நன்றி: தினமணி
Posted by
நெல்லை பொடியன்
at
11:04 PM
0
comments
Labels: தமிழ், தினமணி, பனை, விழிப்புணர்வு
இதுதாங்க 8-வது உலக அதிசயம்!!!
Thursday, February 11, 2010

கவிதையை வெளியிட்ட புலவர் பட்டணம் பழநிச்சாமி
கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை இது. உலகம் முழுவதும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காக இதை வெளியிடுகிறேன்.
தமிழகம் உள்ள தமிழர்கள் எல்லாம் தமிழய்ப் படித்தல் அதிசயம்
தமிழகக் கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனய் அதிசயம்
தமிழக வழக்கு மன்றங் களிலே தமிழில் புழங்கல் அதிசயம்
தமிழில் பெயருடன் தலய்முன் எழுத்தும் தமிழ்க்கய் எழுத்தும் அதிசயம்
தமிழர் இருவர் சந்தித் தாலே தனித்தமிழ் பேசுதல் அதிசயம்
தமிழர் குழந்தய் பெற்றோர் கூப்பிடல் அம்மா அப்பா அதிசயம்
தமிழர் குழந்தய்ப் பெயர்கள் எல்லாம் தமிழில் சூட்டல் அதிசயம்
தமிழர் சிறப்பணி உருமால் கட்டல் தமிழ் நாட்டினிலே அதிசயம்
தமிழ்நில முல்லய் சாமய்கொள்ளு சமயல் காண்பது அதிசயம்
தமிழர் கும்மி பிம்பிலி ஆட்டம் தமிழகம் நடப்பது அதிசயம்
தமிழர் கும்பிடும் வணக்கம் வாழ்த்து தகுதியில் புழங்கல் அதிசயம்
தமிழே இன்னும் இருபது ஆண்டில் ஆட்சியில் இருந்தால் அதிசயம்
தமிழகம் அதிகம் படித்திட்ட பேர்கள் தங்குதல் இங்கே அதிசயம்
தமிழகச் செல்வர் அடிக்கடி வெளிநாடு தாவாமல் இருந்தால் அதிசயம்
தமிழகப் பொதுநலப் பிரச்சினய் ஒற்றுமய் தாங்கிப்பழகல் அதிசயம்
தமிழக உறவுகள் சச்சர வின்றி சமமாய் வாழ்தல் அதிசயம்
தமிழய்த் தாழ்த்தும் ஆங்கில வருடிகள் தமிழாய் தழய்த்தல் அதிசயம்
தமிழே மூச்சு என்போர் எல்லாம் மக்கள் தமிழ்ப் பள்ளி சேர்த்தல் அதிசயம்
தமிழில் தனித்துவம் கொண்டவர் செயலப் தகவில் ஆய்தல் அதிசயம்
தமிழ்ப் போராளி என்கிற பேரும் ழகரம் ஒலித்தல் அதிசயம்
தமிழுக்காக உயிர்கொடுத்தோரின் சமாதி வணக்கம் போதாது
தமிழர் என்போர் எழுச்சியும் கொண்டு முன்னோர் பெருமய் எண்ணுங்கள்
தமிழின் வீழ்ச்சி ஏற்படும் போதில் தமிழா வாழ்ந்து என்ன பயன்?
தமிழுணர்வில்லாத் தடிமாடுகளே தற்கொலய் செய்து தொலையுங்களேன்!
படைப்பை ஆக்கியோன்: அருள்நிதிப் புலவர் பட்டணம் பழநிச்சாமி
வளர்கோகுலம் இல்லம்,
கோவய்-25,
தமிழ்நாடு,
இந்தியா,
செல்போன்-9363266820
(குறிப்பு) இவரது படைப்புகள் தொடர்ந்து எனது வலைப்பதிவில் வெளியாகும்
Posted by
நெல்லை பொடியன்
at
1:48 AM
1 comments
Labels: அரசியல், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, தமிழ், புலவர் பட்டணம் பழநிச்சாமி
தனி ஈழம் ஏன்?
Saturday, February 6, 2010
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகிறார் மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசியர் இராமசாமி.
கோவையில் சனிக்கிழமை துவங்கிய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ நாடு அமைக்கும் குழுவின் உறுப்பினருமான பேராசியர் முனைவர் இராமசாமி ஆற்றிய உரை:
உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேணஅடிய அவசியம் வந்துள்ளது.
Posted by
நெல்லை பொடியன்
at
4:52 AM
2
comments
Labels: இந்தியா, உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, சிறப்பு, தமிழீழம், தமிழ், மலேசியா
5 ஆண்டுக்குள் தனி ஈழம் அமையும்
மாநாட்டில் பேசுகிறார் புலவர் புலமைப்பித்தன்
தமிழ்நாட்டின் கோவை கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் துவக்கிவைத்து ஆற்றிய உரை:
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. நிதி திரட்டுவதற்காக கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எனது நண்பர் கலைஞர் கருணாநிதி நடத்துகிறார். ஆனால், நீதியை நிலைநாட்ட இங்கு மாநாடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிமன்ற படிகட்டுகளில் ஏறித்தான் இம்மாநாட்டுக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் தந்தை செல்வா போராட்டம் நடத்தினார். இருப்பினும் தீர்வு கிடைக்காததால் ஆயுதப்புரட்சி ஏற்படுத்த வேண்டிய நிலை உருவானது. ஆயுதப்புரட்சியை துவக்கிவைத்ததற்கு நானும் ஒரு காரணமானவன்.
எம்.ஜி.ஆரிடம் பேசி தம்பிக்கு ரூ.2 கோடி வழங்கினோம். இந்த பணத்தில் ஆயுதம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆயுதப் போராட்டத்துக்கு தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், முடிந்துவிட்டது என யாராவது கூறினால் அவர்கள் முட்டாள்கள். எந்த ஒரு சுதந்திர போராட்டத்துக்கும் பின்னடைவு ஏற்படுவது இயற்கையானது. ஆனால், அதில் இருந்து மீண்டு எழும்பும். அதுபோல தான் ஈழ விடுதலைப் போராட்டமும். இன்னும் 5 ஆண்டுகளில் ஈழத்தில் சுதந்திர கொடியேற்றப்படும். அந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்.
இலங்கை ராணுவம் மட்டும் தனியாக விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தால் 30 நாட்களில் விடுதலைப்புலிகளால் வெற்றிப் பெற முடியும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ராணுவங்களுடன் இலங்கை ராணுவம் இணைந்து போரிட்டதால் தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.
இந்தியா தான் போரை முன்னின்று நடத்தியது என்பதற்கு பல ஆதாரங்களை கூற இயலும். என்.டி.டி.வி.யின் தலைமை நிருபர் நிதின் கோகலே எழுதியுள்ள புத்தகத்தில் பல சான்றுகளை காண்பித்துள்ளார். 2006-ம் ஆண்டில் 17 ஹெலிகாப்டர்கள், 2 போர் கப்பல்களை இலங்கை ராணுவத்தின் வண்ணம் பூசி இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். இதுபோல பல தந்திரங்களை இந்திய ராணுவம் கையாண்டுள்ளது.
உலகில் 10 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழனுக்கென்று தனி நாடு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். 2008-ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக எனது நண்பர் கருணாநிதி அறிவித்தார்.
அறிவித்தப்படி அவர் ராஜினாமா செய்திருந்தால் ஈழத்தில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்கலாம். அவர் ராஜினாமா செய்தால் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இலங்கை ராணுவத்துக்கு இந்திய உதவி கிடைத்திருக்காது.
மிகப்பெரிய களங்கத்துக்கு ஆளாகிவிட்டார் எனது நண்பர் கருணாநிதி. இந்த களங்கத்தை துடைக்க தான் கோவையில் உலத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார். கங்கையில் உள்ள அனைத்து நீரை வைத்து அவர் கைகழுவினாலும் களங்கத்தை துடைக்க இயலாது.
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் 2, 3, 4-ம் தர குடிமக்களாகத்தான் வாழ்கின்றனர். முதல்தர குடிமகனாக, தனிநாடு உடையவராக தமிழர்கள் வாழ்ந்தால் தான் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படும்போது தட்டிக்கேட்க முடியும். தமிழனுக்கென்று தனி நாடு ஈழத்தில் விரைவில் அமையும் என்றார்.
Posted by
நெல்லை பொடியன்
at
2:39 AM
2
comments
Labels: இந்தியா, ஈழம், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, கோவை, தமிழ்
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு இன்று துவக்கம்: இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இருவர் பங்கேற்பு
Friday, February 5, 2010
கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாநாடு அரங்கை பார்வையிடும் டாக்டர் க.கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள்
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (6,7-02-2010) நடைபெறுகிறது. இதில் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இருவர் பங்கேற்கின்றனர்.
புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகள் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றனர்.
கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த தமிழ் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
முதல்நாள் (6-02-2010) நிகழ்ச்சிகள்:
காலை 10 மணி தமிழர் எழுச்சி கொடியேற்றம்,
காலை 10.15 மணி வீர வணக்கம்,
காலை 10.30 மணி சுடர் ஏற்றுதல்,
காலை 10.45 மணி மாநாடு துவக்கம்.
வரவேற்புரை-பேராசிரியர் அருணா,
தலைமை-டாக்டர் க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சி நிறுவனர்),
முன்னிலை- தெ.சீ.சு.மணி,
மாநாடு திறப்பாளர்-பேராசிரியர் ப.ராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாகாணம், மலேசியா.
மாநாடு துவக்க உரை: புலவர் புலமைப்பித்தன்
பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை புகைப்பட கண்காட்சி.
முதல்அமர்வு: கவிஞர் இன்குலாப், கவிதா சரண், எழுத்தாளர் சூரியதீபன், பாமரன், குமரவேல், சுஜிதா, கோவை ஞானி.
2-ம் அமர்வு: கண்ணா (மலேசியா), குமணராசா (மும்பை), சிவகாமிதேவி (கோலாலம்பூர்), பேச்சிமுத்து (கேரளம்), குருமூர்த்தி, பழனி (பெங்களூர்).
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (07-022010)
முதல்அமர்வு (காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை)
அய்யநாதன், புதுக்கோட்டை பாவணன், புகழேந்தி தங்கராசு, சுந்தரேசன், பேராசிரியர் சரசுவதி, அருளானந்தம்.
வாழ்த்துரை:
மனோ கணேசன், சுரேஷ்பிரேமச்சந்திரன் (இலங்கை தமிழ் எம்.பி.க்கள்).
தமிழருவிமணியன், ஓவியா, பழ.கருப்பையா (சிந்தனையாளர்கள்).
நிறைவுரை:
பினாங்கு துணை முதலமைச்சர் ப.ராமசாமி,
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
தோழர் தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலர்)
நன்றியுரை: வே.க.அய்யர்.
Posted by
நெல்லை பொடியன்
at
8:52 AM
0
comments
Labels: இந்தியா, இலங்கை, உலகத் தமிழ் மாநாடு, கோவை, தமிழ்
சிதம்பரத்துக்கு சொரணை இருக்கா?
Thursday, February 4, 2010
புதுதில்லியில் 02-02-2010-ல் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தமிழையும், தமிழனையும் அவமானப்படுத்தும் வகையி்ல பேசியுள்ளார். தமிழை, தமிழனை, சக தமிழனே அவமதித்திருப்பது வெட்கக்கேடான செயல்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்களே என்று நிருபர் ஒருவர் தமிழில் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சிதம்பரம், தமிழில் கேள்வி கேட்கக் கூடாது. தமிழில் கேள்வி கேட்டால் இங்கே மற்றவர்களுக்கு புரியாது. ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என இருமாப்புடன் பேசியுள்ளார்.
அதேநேரத்தில் ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தனது தனது செயலரின் உதவியுடன் பதில் அளித்தார்.
ஹிந்தியில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் ஆங்கிலத்தில் கேளுங்கள் என எதிர்கேள்வி கேட்காமல் வாய்மூடி மௌனியாக சிதம்பரம் இருந்தது ஏன்? எதிர்கேள்வி கேட்டால் அதே இடத்திலேயே செருப்பு மூஞ்சிக்கு வரும். அடுத்த சில நாட்களில் பதவிக்கு ஆபத்துக்கூட வரக்கூடும்.
ஆனால், தமிழில் கேள்விகேட்கக்கூடாது எனக் கூறினால் செருப்பும் வராது, பருப்பும் வராது. சிதம்பரத்தின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு தமிழனிடம் ஒற்றுமையும் கிடையாது. இந்த சிதம்பர ரகசியத்தை அவர் ஏற்கெனவே அறிந்துவைத்திருப்பதால் தமிழை தலைகுனிய செய்துவிட்டார். இந்திய அரசில் உயர்பதவி வகிக்கும் ஒருவரே, ஒரு தமிழனே இப்படி செம்மொழி தமிழை அவமதிக்கலாமா? அல்லது அவமதிக்க தமிழக அரசியல்வாதிகள் விடலாமா?.
சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முதல் இடத்தில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியோ, அங்கேயுள்ள நிலையில் அன்றைய தினம் இருந்தவர்கள் வேற்றுமொழிக்காரர்கள். அவர்களுக்கு ஆங்கிலம், அதைவிட்டால் ஹிந்தி தான் தெரியும். ஆகவே, அந்த சூழல்நிலையில் அந்த கருத்தை சிதம்பரம் கூறியிருக்கிறார் என சிதம்பரத்துக்கு பல்லக்கு தூக்குகிறார்.
சிதம்பரம் தமிழில் பதில் கூறினால் என்ன குறைந்துவிடும். வாயில் இருக்கும் முத்து கீழே விழுந்துவிடுமா? அல்லது உயரத்தில் ஒரு அடி குறைந்துவிடுவாரா?. தமிழனாய் பிறந்து தமிழை தலைகுனியவைப்பது, பெற்ற தாயை பிள்ளேயே தலைகுனியவைப்பதற்கு சமம்.
ஐரோப்பிய நாடுகளில் பிறக்க வேண்டிய சிதம்பரம், தட்டுத்தடுமாறி தமிழகத்தில் தமிழனாய் பிறந்துவிட்டார். தடுமாற்றத்தால் தமிழனாய் பிறந்த சிதம்பரத்துக்கு இதெல்லாம் புரியுமா? என்பது கேள்விக்குறி தான். ஆனால், அவருக்கு புரியவைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கலைஞரின் கள்ளக் கணக்கும்!
Thursday, January 7, 2010
தினமணியின் தலையங்கபக்க துணை கட்டுரையில் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கணையுடன் கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் (19-9-2009) உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கலைஞர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஈழத்தில் தமிழர்கள் பரிதாப நிலையில் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாமா? என்ற ஆதங்கம் தமிழ் அறிஞர்களுக்கு. ஆனால், உடன்பிறப்புகளுக்கும், கதர்சட்டைகளுக்கும் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.
கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்காலத்தை (சட்டப்பேரவை தேர்தலை) கணக்கு போட்டு வழக்கம்போல கலைஞர் காய்நகர்த்துகிறார் என்ற கிசுகிசுப்பு கிளம்பியது. உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் உரிய அனுமதி வழங்காததால், உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக 29-9.2009-ல் மாற்றி அறிவிக்கப்பட்டது.
ஜனவரியில் நடத்தப்பட இருந்த மாநாடு, ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தநாள் முதல் இதுவரை இது தொடர்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.
மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.
இது அவரது சொந்த விருப்பம் அல்லது முதலமைச்சர் என்ற முறையில் அவர் வெளியிடும் அறிவிப்பாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அந்த அறிக்கையி்ன் விவரம்:
கோவையில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் திட்டத்தின்கீழ் கோவை உக்கடத்தில் ரூ.68 கோடி செலவில் 2 ஆயிரத்து 232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அம்மன்குளத்தில் ரூ.50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதுதான் அறிக்கையின் சுருக்கம்.
இதை கோவைவாசிகள் (மாநகராட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது மாநகராட்சி தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்) தவிர, பிற மாவட்ட மக்களோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ வாசித்தால் ஆகா கோவைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். உலகத் தமிழ் மாநாடு நடப்பதால் கோடிக்கணக்கான நிதி கிடைக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின்றன. குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம் கோவை நகரமே சொர்க்கம் போல மாறிவிடும் என எண்ணத் தோன்றும்.
இதை உன்னிப்பாக ஆழமாக பார்த்தால் கலைஞரின் கள்ளக்கணக்கு அல்லது கலைஞர் அரசு அதிகாரிகளின் கள்ளக்கணக்கு வெட்டவெளிச்சமாகும்.
ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் கலைஞர் அரசின் திட்டம் அல்ல. இது மத்திய அரசின் கனவுத் திட்டம். ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 1998-ம் ஆண்டு முதல் இத் திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளிலும், பிற மாநிலங்களில் முக்கியமான மாநகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வீடு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை இத் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது மத்திய அரசு. மாநில அரசின் பங்கு 20 சதவீதம். மீதமுள்ள 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. கலைஞர் ரூ.118 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்துள்ள அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஓராண்டுக்கு முன்பாகவும் (7-9-2008), உக்கடத்தில் கடந்த மே மாதத்திலும் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இப்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
அம்மன்குளத்தில் 7.9.2008-ல் பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்
உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் (கலைஞர் அறிவித்த ஒரே வாரத்துக்குள் முளைத்துவிட்டது போலும்)
ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை வாரியம் இந்த வீடுகளை கட்டி வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கியதாக எப்படி கணக்கு காட்டுகிறார் கலைஞர்?.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம். குடியிருப்புகள் கட்டத் துவங்கியது ஓராண்டுக்கு முன்பு. மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா கலைஞரே?. மாநாடு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கான நிதியையும் கணக்கு காட்டுவது எதற்காக?. புகழுக்காகவா? பெருமைக்காகவா? கள்ளக்கணக்கு காட்டவா?
உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உருப்படியான திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனில் கிடப்பில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து அதிகமான இடங்களில் சிங்கார சென்னைபோல அழகான மேம்பாலங்கள் (தேவை 10, குறைந்தபட்சம் 5), அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டியது தானே?.
அவற்றையெல்லாம் அறிவித்தால் கலைஞரின் குட்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்துவிடும். அதனால்தான், கண்ணாம்மூச்சு காட்டும் திட்டங்களை மட்டும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.
கோவை சிறையில் உலகத் தரத்துக்கு இணையான தாவரவியல் பூங்கா அமைக்கும் மற்றொரு மெகா மோசடி திட்டத்தையும் அறிவித்துள்ளார் கலைஞர். இப்போது இருக்கும் சிறையை மாற்ற சில காலம் பிடிக்குமாம் (10 ஆண்டுகளோ அல்லது 100 ஆண்டுகளோ தெரியவில்லை). பாதுகாப்பான இடம் வேறு இல்லை என்பது அடுத்த பிரச்னை. கட்டடம் இருக்கும் இடத்தை தவிர காலியாக இருக்கும் 93 ஏக்கரில் (மொத்த பரப்பு 165 ஏக்கர்) தாவரவியல் பூங்காவாம்.
உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சிறை வளாகத்தில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவை எப்படி போய் பார்ப்பது? எப்போது சிறை வேறு இடத்துக்கு மாற்றப்படும்? தாவரவியல் பூங்கா மக்கள் பார்வைக்கு எப்போது திறந்துவிடப்படும்? அத்தைக்கு மீசை எப்போது முளைக்கும்? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்க வேண்டியது தான்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக திட்டங்களை, அதிமுகவும், அதிமுக திட்டங்களை, திமுகவும் தொடராது என்பது எழுத்தப்படாத அரசியல் கோட்பாடு. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்துவிட்டால், கோவை சிறையில் தாவரவியல் பூங்கா என்பது பகல்கனவாகிவிடும்.
உருப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழர்களையும், கோவைவாசிகளையும் திருப்திபடுத்துவதற்கு பதில், கள்ளக் கணக்கு, கானல் நீர் போன்ற திட்டங்களை அறிவித்து கலைஞர் குழம்ப வேண்டாம். தமிழர்களையும் குழப்பவும் வேண்டாம். ஏமாற்றவும் வேண்டாம்.
இப்படிக்கு கலைஞரின் தம்பி....
நெல்லை பொடியன்
Posted by
நெல்லை பொடியன்
at
3:34 AM
5
comments
Labels: கருணாநிதி, கலைஞர், சிறப்பு, செம்மொழி மாநாடு, தமிழ்
