சிதம்பரத்துக்கு சொரணை இருக்கா?

Thursday, February 4, 2010



புதுதில்லியில் 02-02-2010-ல் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தமிழையும், தமிழனையும் அவமானப்படுத்தும் வகையி்ல பேசியுள்ளார். தமிழை, தமிழனை, சக தமிழனே அவமதித்திருப்பது வெட்கக்கேடான செயல்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்களே என்று நிருபர் ஒருவர் தமிழில் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சிதம்பரம், தமிழில் கேள்வி கேட்கக் கூடாது. தமிழில் கேள்வி கேட்டால் இங்கே மற்றவர்களுக்கு புரியாது. ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என இருமாப்புடன் பேசியுள்ளார்.
அதேநேரத்தில் ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தனது தனது செயலரின் உதவியுடன் பதில் அளித்தார்.

ஹிந்தியில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் ஆங்கிலத்தில் கேளுங்கள் என எதிர்கேள்வி கேட்காமல் வாய்மூடி மௌனியாக சிதம்பரம் இருந்தது ஏன்? எதிர்கேள்வி கேட்டால் அதே இடத்திலேயே செருப்பு மூஞ்சிக்கு வரும். அடுத்த சில நாட்களில் பதவிக்கு ஆபத்துக்கூட வரக்கூடும்.

ஆனால், தமிழில் கேள்விகேட்கக்கூடாது எனக் கூறினால் செருப்பும் வராது, பருப்பும் வராது. சிதம்பரத்தின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு தமிழனிடம் ஒற்றுமையும் கிடையாது. இந்த சிதம்பர ரகசியத்தை அவர் ஏற்கெனவே அறிந்துவைத்திருப்பதால் தமிழை தலைகுனிய செய்துவிட்டார். இந்திய அரசில் உயர்பதவி வகிக்கும் ஒருவரே, ஒரு தமிழனே இப்படி செம்மொழி தமிழை அவமதிக்கலாமா? அல்லது அவமதிக்க தமிழக அரசியல்வாதிகள் விடலாமா?.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முதல் இடத்தில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியோ, அங்கேயுள்ள நிலையில் அன்றைய தினம் இருந்தவர்கள் வேற்றுமொழிக்காரர்கள். அவர்களுக்கு ஆங்கிலம், அதைவிட்டால் ஹிந்தி தான் தெரியும். ஆகவே, அந்த சூழல்நிலையில் அந்த கருத்தை சிதம்பரம் கூறியிருக்கிறார் என சிதம்பரத்துக்கு பல்லக்கு தூக்குகிறார்.

சிதம்பரம் தமிழில் பதில் கூறினால் என்ன குறைந்துவிடும். வாயில் இருக்கும் முத்து கீழே விழுந்துவிடுமா? அல்லது உயரத்தில் ஒரு அடி குறைந்துவிடுவாரா?. தமிழனாய் பிறந்து தமிழை தலைகுனியவைப்பது, பெற்ற தாயை பிள்ளேயே தலைகுனியவைப்பதற்கு சமம்.

ஐரோப்பிய நாடுகளில் பிறக்க வேண்டிய சிதம்பரம், தட்டுத்தடுமாறி தமிழகத்தில் தமிழனாய் பிறந்துவிட்டார். தடுமாற்றத்தால் தமிழனாய் பிறந்த சிதம்பரத்துக்கு இதெல்லாம் புரியுமா? என்பது கேள்விக்குறி தான். ஆனால், அவருக்கு புரியவைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.