தினமணியின் தலையங்கபக்க துணை கட்டுரையில் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கணையுடன் கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் (19-9-2009) உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கலைஞர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஈழத்தில் தமிழர்கள் பரிதாப நிலையில் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாமா? என்ற ஆதங்கம் தமிழ் அறிஞர்களுக்கு. ஆனால், உடன்பிறப்புகளுக்கும், கதர்சட்டைகளுக்கும் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.
கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்காலத்தை (சட்டப்பேரவை தேர்தலை) கணக்கு போட்டு வழக்கம்போல கலைஞர் காய்நகர்த்துகிறார் என்ற கிசுகிசுப்பு கிளம்பியது. உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் உரிய அனுமதி வழங்காததால், உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக 29-9.2009-ல் மாற்றி அறிவிக்கப்பட்டது.
ஜனவரியில் நடத்தப்பட இருந்த மாநாடு, ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தநாள் முதல் இதுவரை இது தொடர்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.
மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.
இது அவரது சொந்த விருப்பம் அல்லது முதலமைச்சர் என்ற முறையில் அவர் வெளியிடும் அறிவிப்பாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அந்த அறிக்கையி்ன் விவரம்:
கோவையில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் திட்டத்தின்கீழ் கோவை உக்கடத்தில் ரூ.68 கோடி செலவில் 2 ஆயிரத்து 232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அம்மன்குளத்தில் ரூ.50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதுதான் அறிக்கையின் சுருக்கம்.
இதை கோவைவாசிகள் (மாநகராட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது மாநகராட்சி தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்) தவிர, பிற மாவட்ட மக்களோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ வாசித்தால் ஆகா கோவைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். உலகத் தமிழ் மாநாடு நடப்பதால் கோடிக்கணக்கான நிதி கிடைக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின்றன. குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம் கோவை நகரமே சொர்க்கம் போல மாறிவிடும் என எண்ணத் தோன்றும்.
இதை உன்னிப்பாக ஆழமாக பார்த்தால் கலைஞரின் கள்ளக்கணக்கு அல்லது கலைஞர் அரசு அதிகாரிகளின் கள்ளக்கணக்கு வெட்டவெளிச்சமாகும்.
ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் கலைஞர் அரசின் திட்டம் அல்ல. இது மத்திய அரசின் கனவுத் திட்டம். ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 1998-ம் ஆண்டு முதல் இத் திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளிலும், பிற மாநிலங்களில் முக்கியமான மாநகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வீடு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை இத் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது மத்திய அரசு. மாநில அரசின் பங்கு 20 சதவீதம். மீதமுள்ள 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. கலைஞர் ரூ.118 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்துள்ள அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஓராண்டுக்கு முன்பாகவும் (7-9-2008), உக்கடத்தில் கடந்த மே மாதத்திலும் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இப்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
அம்மன்குளத்தில் 7.9.2008-ல் பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்
உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் (கலைஞர் அறிவித்த ஒரே வாரத்துக்குள் முளைத்துவிட்டது போலும்)
ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை வாரியம் இந்த வீடுகளை கட்டி வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கியதாக எப்படி கணக்கு காட்டுகிறார் கலைஞர்?.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம். குடியிருப்புகள் கட்டத் துவங்கியது ஓராண்டுக்கு முன்பு. மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா கலைஞரே?. மாநாடு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கான நிதியையும் கணக்கு காட்டுவது எதற்காக?. புகழுக்காகவா? பெருமைக்காகவா? கள்ளக்கணக்கு காட்டவா?
உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உருப்படியான திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனில் கிடப்பில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து அதிகமான இடங்களில் சிங்கார சென்னைபோல அழகான மேம்பாலங்கள் (தேவை 10, குறைந்தபட்சம் 5), அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டியது தானே?.
அவற்றையெல்லாம் அறிவித்தால் கலைஞரின் குட்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்துவிடும். அதனால்தான், கண்ணாம்மூச்சு காட்டும் திட்டங்களை மட்டும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.
கோவை சிறையில் உலகத் தரத்துக்கு இணையான தாவரவியல் பூங்கா அமைக்கும் மற்றொரு மெகா மோசடி திட்டத்தையும் அறிவித்துள்ளார் கலைஞர். இப்போது இருக்கும் சிறையை மாற்ற சில காலம் பிடிக்குமாம் (10 ஆண்டுகளோ அல்லது 100 ஆண்டுகளோ தெரியவில்லை). பாதுகாப்பான இடம் வேறு இல்லை என்பது அடுத்த பிரச்னை. கட்டடம் இருக்கும் இடத்தை தவிர காலியாக இருக்கும் 93 ஏக்கரில் (மொத்த பரப்பு 165 ஏக்கர்) தாவரவியல் பூங்காவாம்.
உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சிறை வளாகத்தில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவை எப்படி போய் பார்ப்பது? எப்போது சிறை வேறு இடத்துக்கு மாற்றப்படும்? தாவரவியல் பூங்கா மக்கள் பார்வைக்கு எப்போது திறந்துவிடப்படும்? அத்தைக்கு மீசை எப்போது முளைக்கும்? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்க வேண்டியது தான்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக திட்டங்களை, அதிமுகவும், அதிமுக திட்டங்களை, திமுகவும் தொடராது என்பது எழுத்தப்படாத அரசியல் கோட்பாடு. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்துவிட்டால், கோவை சிறையில் தாவரவியல் பூங்கா என்பது பகல்கனவாகிவிடும்.
உருப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழர்களையும், கோவைவாசிகளையும் திருப்திபடுத்துவதற்கு பதில், கள்ளக் கணக்கு, கானல் நீர் போன்ற திட்டங்களை அறிவித்து கலைஞர் குழம்ப வேண்டாம். தமிழர்களையும் குழப்பவும் வேண்டாம். ஏமாற்றவும் வேண்டாம்.
இப்படிக்கு கலைஞரின் தம்பி....
நெல்லை பொடியன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கலைஞரின் கள்ளக் கணக்கும்!
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இதற்கு தான் அவருக்கு பெயர் கலைஞர்னு வைச்சிருக்காங்க பொடியன். அது கூட தெரியலையா?
கலைஞர் பற்றி என் பதிவை சொல்லிருக்கேன். உங்க பதிவும் உண்மையாக இருக்குமா? என்பதற்கு ஒரு பட்டிமன்றம் கூட வைக்கலாம்.
கலைஞருக்கு இது கை வந்த கலை இது.
ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாணை வெளியிட்டால் இப்படியா எழுதுவது பொடியன்?.
உங்களுடைய ஆதாரப்பூர்வமான செய்திக்கும், படங்களுக்கும் நன்றி. தமிழ் வாழ்க!. தமிழர் இனம் வாழ்க!
Post a Comment