தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என தமிழகத்தின் வீதியெங்கும் முழங்கி வந்த விஜயகாந்த், ஒத்தக் கருத்துடைய கட்சியுடன் கூட்டணிக்கு தயார் என அந்தர் பல்டி அடித்துவிட்டார். 21-ம் நூற்றாண்டில் பிற துறைகளில் ஏற்பட்டதுபோல அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (பணம் இருந்தால் அரசியல் செய்ய முடியும் என்பதை தாங்க இப்படி நாசுக்காக சொல்கிறோம்), கட்சி துவக்கிய 5 ஆண்டுகளில் கிடைத்த பழுத்த அனுபவங்கள் உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களால் விஜயகாந்த் பல்டி அடித்திருக்கலாம்.
தமிழகத்தில் மாறிமாறி வரும் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்ற வீர வசனத்துடன், 2005ல் தே.மு.தி.க., வை துவக்கினார் விஜயகாந்த். கேப்டன் என தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அடைமொழியை பயன்படுத்தி, கிராமங்களில் செழித்துவளர்ந்த எம்.ஜி.ஆர் வாக்குவங்கியை அறுவடை செய்தார் விஜயகாந்த்.
எட்டு மாத குழந்தை பருவத்திலேயே 2006-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலை கூட்டணியின்றி சந்தித்தது தேமுதிக கட்சி. பாமகவின் கோட்டையான விருத்தாச்சலம் தொகுதியில் (ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள தொகுதி) துணிச்சலுடன் நின்று சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று பாமகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜயகாந்த். பிற தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர்களில் 99 சதவீதத்தினர் 3-வது இடத்தை பிடித்தனர்.
பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி தேமுதிக பெற்ற வாக்குகளால் மாறிப்போனது. தமிழக அரசியலில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை உருவானது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு வியப்பளிக்கும் வகையில் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக.
திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரியகட்சி தேமுதிக தான் என ஜனநாயக ரீதியாக நிரூபித்தது அக் கட்சியின் வாக்குவங்கி. பொதுத்தேர்தல் முடிந்த ஆறு மாதங்களில், சபாநாயகர் பழனிவேல்ராஜன் மறைவால், மதுரை மத்தியத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை விட 2,515 ஓட்டு மட்டுமே குறைவாக பெற்று மூன்றாவது இடத்தை தே.மு.தி.க., பிடித்தது. பொதுத்தேர்தலில் 8.38 சதவீதமாக இருந்த தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, இத் தேர்தலில் 19.13 சதவீதமாக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து, எட்டு மாத இடைவெளியில், மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தே.மு.தி.க., சந்தித்தது. இந்த தேர்தலில் 18 சதவீத ஓட்டுகளைப் பெற்று தனது பலத்தை வெளிப்படுத்தியது. இந்த இரு தேர்தல்களிலும், தே.மு.தி.க.,விற்கு மக்கள் வழங்கிய ஆதரவு, அ.தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தி.மு.க., வுக்கு மாற்று சக்தியாக தேமுதிக என மக்கள் அங்கீகரித்து விட்டனர் என்பதோடு, 2011ம் ஆண்டில் கேப்டன் ஆட்சி தான் என்ற முரசு கொட்டினர் தேமுதிக தொண்டர்கள்.
தேமுதிகவின் வாக்கு வங்கியை கண்டு புருவம் உயர்த்திய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மக்களவைத் தேர்தலின்போது விஜயகாந்துடன் ரகசிய பேச்சு நடத்தின. 7 சீட், 600 கோடி ரூபாய் வேண்டும் என காங்கிரஸ் கட்சியுடன் பேரம் பேசியதாகவும், ஆனால், 5 சீட், ரூ.250 கோடி தருவதாக காங்கிரஸ் ஒத்துக்கொண்டதாகவும் தேமுதிக மீது விமர்சனம் எழுந்தது.
இருப்பினும் தனித்தே களம் இறங்கிய தேமுதிக, மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், அடுத்து வந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேமுதிகவுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றன.
தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தே.மு.தி.க., பக்கம் ஓரளவு சாய்ந்தது. தே.மு.தி.க.,வின் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, சமீபத்திய இடைத்தேர்தலில் மாயமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு 17 ஆயிரத்து 57 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், தற்போதைய இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 7,063 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதே போல், கடந்த மக்களவைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் 9,712 ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க., தற்போதைய இடைத் தேர்தலில் வெறும் 4,186 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.
கரடு, முரடாண அரசியல் பாதையில் தனித்து செல்வது விஜயகாந்துக்கு பிடிக்கலாம். அவரது மனஉறுதி அப்படி. ஆனால், கட்சித் தொண்டர்கள் எத்தனைநாள்தான் கரடு, முரடாண பாதையில் அவருடன் பின்தொடர்ந்து வருவார்கள். எனவே, இதே பாதையில் பயணித்தால் அரசியலில் கரையேற முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் விஜயகாந்த்.
இத்தகைய நெருக்கடியான நிலையில் தான் கூட்டணிக்கு தயார் என திமுக, அதிமுகவின் பார்முலாவுக்கு மாறிவிட்டார் விஜயகாந்த். கரடு முரடாண பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் பயணம் செய்ய காத்திருக்கிறார் விஜயகாந்த். அந்த பாதை போயஸ் தோட்டம் (அதிமுக) வழியாக செல்கிறதா?, கோபாலபுரம் (திமுக) வழியாக செல்கிறதா? அல்லது சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ்) வழியாக செல்கிறதா? என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
போயஸ் தோட்டம் நோக்கி பயணித்து அம்மா பிள்ளையாக மாறிவிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர் விஜயகாந்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல்நோக்கர்கள். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது
கருப்பு எம்.ஜி.ஆரின் பாதை வெளிச்சமாகிவிடும்.
கறுப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?
Thursday, January 14, 2010
Posted by நெல்லை பொடியன் at 10:55 PM
Labels: அரசியல், விஜயகாந்த்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வெற்றிக்கு வழி தேடுகிறார். கிடைக்குமா என்பது தேர்தல் முடிந்ததும் தெரியும்...
தனியா நின்னா ஓட்டு கிடைக்கும். ஆனா, ஜெயிக்க முடியாது. சேர்ந்து நின்னா ஜெயிக்கலாம். தனித்தன்மை போய்விடும். பாமக போல எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.
nalla pathivu
உங்க பதிவுக்கு நன்றி வெங்கட்.
Post a Comment