தோழர் ஜோதிபாசுவுக்கு சிவப்பு வணக்கம்

Sunday, January 17, 2010




இந்தியாவின் முதுபெரும் பொதுவுடமை தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு (96) கோல்கத்தா சால்ட்லேக்கில் உள்ள ஆம்ரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (17-01.2010)-ல் இறந்தார்.

இந்தியாவின் சிறந்த பொதுவுடமைவாதி, பொதுவுடமை தத்துவத்தை ஆட்சியில் செயல்படுத்தி வெற்றி கண்டவர், பிரதமராகும் வாய்ப்பை (இந்தியாவின் முதல் பொதுவுடமை பிரதமர் ஆகும் வாய்ப்பை) பொதுவுடமைவாதிகளால் இழந்தவர் என அடுக்கடுக்கான வார்த்தைகளால் தோழர் ஜோதிபாசுவை பற்றி குறிப்பிட முடியும்.

உலக வரலாற்றில் தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு நீண்ட காலம் ஆட்சியில் இருந்த முதல் பொதுவுடமை தலைவர் என்ற முத்திரையை பதித்தவர்.
மேற்குவங்கத்தில் 1977 முதல் 2000-ம் ஆண்டு வரை 5 முறை முதலமைச்சராக இருந்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நீண்டகாலம் (23 ஆண்டுகள்) முதலமைச்சர் பதவியை வகித்த பெருமைக்குரியவர்.


1996ஆம் ஆண்டு மைய அரசில் ஐக்கிய முன்னணியின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்க அனைவரின் ஒப்புமையைப் பெற்றபோதிலும் தம் கட்சியின் பொலிட்பீரோ விருப்பத்திற்கிணங்க அரசு அமைப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை வரலாற்றுப்பிழையாக பின்னர் பாசு குறிப்பிட்டார்.

ஆட்சிக் கட்டில் கிடைத்தால் போதும் சுடுகாடு போகும் வரை கட்டிலில் இருந்து இறங்கமாட்டேன் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. ஆனால், 2000-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி வெற்றிப் பெறக்கூடிய நிலையில் இருந்தும்கூட தனது உடல்நலத்தை காரணம் காட்டி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் ஜோதிபாசு.

முதலமைச்சர் பதவியில் இருந்து ஜோதிபாசு ஒதுங்கியபின் பொதுவுடமை கட்சிக்கும் பின்னடைவு தான். 2004 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்றபோதும், பல்வேறு சிங்குர், மாவோயிஸ்ட் போராட்டம் என பல்வேறு சர்ச்சைகள் சிக்கிக்கொண்டன. 2009 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சிக்கு பெருத்த பின்னடைவு.

பொதுவுடமை கட்சி கோலோச்சிய அதே களத்தி்ல் (மேற்கு வங்கத்தில்), அக் கட்சியின் வீழ்ச்சியையும் காணக்கூடிய துர்பாக்கிய நிலை ஜோதிபாசுக்கு ஏற்பட்டது கொடுமையிலும், கொடுமை. ஜோதிபாசு உயிருடன் இருக்கும்போதே மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படவில்லை என்பது தோழர்களின் மனதுக்கு சற்று ஆறுதலான விஷயம்.


ஜோதிபாசுவின் இளமை பருவம்


மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் ஓர் நடுத்தர குடும்பத்தில் 8-7-1914-ல் ஜோதிபாசு பிறந்தார். அவருக்கு ஜோதிரிந்தர பாசு என அவரது பெற்றோர் பெயரிட்டனர். அவரது தந்தை நிஷிகாந்த பாசு (தற்போது பங்களாதேசத்தில்) உள்ள கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்கா மாவட்டத்தில் பரோடி கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் ஹேமலதா பாசு இல்லத்தரசியாக இருந்தார்.

பள்ளிக்கல்வியை 1920 ஆம் ஆண்டு கோல்கத்தா தர்மதாலாவிலுள்ள லோரேட்டோ பள்ளியில் துவக்கினார். .பள்ளியில் சேர்க்கும்போதுதான் அவரது தந்தை அவர் பெயரை ஜோதிபாசு என மாற்றினார். 1925ஆம் ஆண்டு புனித சேவியர் பள்ளிக்கு மாறினார் ஜோதிபாசு. 1935-ம் ஆண்டில் இந்து கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார்.


பொதுவுடமை கட்சியில் நெருக்கம்

அடுத்து சட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு பிரித்தானிய பொதுவுடமைக் கட்சி மூலம் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டார். 1940ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக மிடில் டெம்பிள் சட்டரங்கில் பதிந்து கொண்டார். அந்த ஆண்டே இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தொடருந்து தொழிலாளர் சங்க பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் தமது சட்டப்படிப்பின்போதே சமூக அமைப்புகளிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட பாசு இந்தியா திரும்பியதும் இடதுசாரி அரசியலில் பங்கெடுக்கும் தமது எண்ணத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.அவர்களது பலத்த எதிர்ப்புகளுக்கிடையேயும் பிரித்தானிய இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போதிலும் தமது குறிக்கோளிடமிருந்து மாறவில்லை.

அரசியல் வாழ்க்கை

1946ஆம் ஆண்டு வங்காள சட்டமன்றத்திற்கு தொடருந்து தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு இந்திய பொதுவுடமைக் கட்சி பிளவுபட்டபோது புதிதாக துவக்கப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழுவில் (பொலிட்பீரோ) முதல் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார்.

முதல் அரசியல்தலைமைக்குழுவில் அப்போதைய கட்சியின் பொதுச்செயலர் பி.சுந்தரய்யா, பி.டி.ராணாதேவ், பிரமோத் தாஸ் குப்தா, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், எம்.பசவபுன்னையா, ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முதல் தலைமைக்குழுக் கூட்டம் கோவையில் தான் நடைபெற்றது.




முதல் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுடன் ஜோதிபாசு: நன்றி-கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி


பின்னர் கொச்சி (1968), மதுரை (1972), ஜலந்தர் (1978), விஜயவாடா (1982), கோல்கத்தா (1985), ஹைதராபாத் (2002), தில்லி (2005) ஆகிய நகரங்களில் நடைபெற்ற அரசியல்தலைமைக்குழுக்களில் ஜோதிபாசு இடம்பெற்றிருந்தார். கடைசியாக கோவையில் 2008-ல் நடைபெற்ற அரசியல்தலைமைக்குழுக் கூட்டத்தில் உடல்நலம் காரணமாக பங்கேற்கவில்லை.

அவசர நிலை:

1967 மற்றும் 1969 ஆண்டுகளில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1975 இல், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவெங்கும் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டது, பொதுவுடமைவாதிகள் வேட்டையாடப்பட்டார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரம் முன்னணி பொதுவுடமை ஊழியர்களை இந்தியா இழந்தது, அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை மேற்கு வங்க மாநிலம் இழந்தது. இருப்பினும் அஞ்சாமல் செயல்பட்ட ஜோதிபாசு உள்ளிட்ட பொதுவுடமை தலைவர்கள், மக்களின் ஆதரவை வென்றெடுத்தார்கள்.

இடது முன்னணி:

அதனைத் தொடர்ந்து 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணி பெரும்பான்மை பெற்றது. 21-61977 முதல் 6-11-2000 வரை தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

அந்த அரசு நிலச் சீர்திருத்ததை அமல்படுத்தியது. சுதந்திரத்திற்கு முன்பாக நில உடமை என்பது அரசர்களைச் சார்ந்ததாக இருந்தது. பெரும்பாலான நிலங்கள் பெரிய ஜமீந்தார்களிடமும், அரச பரம்பரையின் கடைக்கண் பார்வை பெற்றவர்களிடமும் இருந்தது. மிக முக்கியச் சொத்தான நிலம் இவ்வாறு சிறு பகுதியினரின் கீழ் இருந்ததை மாற்றி. உழைக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. மேலும், பொது வினியோக முறை, கல்வி, பொது சுகாதாரம் பேணுதல் எனப் பலவிசயங்களிலும் அந்த அரசு சிறப்பாக செயல்பட்டது.

2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு பதவியிலிருந்து விலகினார். அவரது நம்பிக்கைக்குரிய புத்ததேவ் பட்டாசார்யா அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஜோதிபாசுவின் கனவுகளை நிறைவேற்றுவதும், சரிந்து கிடக்கும் பொதுவுடமை கட்சி செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்துவதும் தான் அவருக்கு தோழர்கள் செய்யும் கைமாறு. அவரது இழப்பு பொதுவுடமை கட்சிக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் பேரிழப்பு.

முதுபெரும் தோழர் ஜோதிபாசுக்கு மீண்டும் ஒருமுறை சிவப்பு வணக்கம்!!!!!!..


தோழமையுடன் நெல்லை பொடியன்

2 comments:

venkat said...

//ஆட்சிக் கட்டில் கிடைத்தால் போதும் சுடுகாடு போகும் வரை கட்டிலில் இருந்து இறங்கமாட்டேன் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. ஆனால், 2000-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி வெற்றிப் பெறக்கூடிய நிலையில் இருந்தும்கூட தனது உடல்நலத்தை காரணம் காட்டி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் ஜோதிபாசு.//

supper

நெல்லை பொடியன் said...

நன்றி வெங்கட்