05.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான். அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.
எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.
அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர். அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில், ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அதைவிட கொடுமையான விஷயம்.
சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும், இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான். கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும், அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் (1 முதல் 8-ம் வகுப்பு வரை) சேர்கின்றனர். இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர். இது உலக சராசரியைவிட (23) மிகக் குறைவு. வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர். வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, எழுத்தறிவு சதவீதமும், உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை. கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள். உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.
அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. வளர்ந்த, வளமான, படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம். ஏழ்மையான, படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன? இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல், குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம். எனவே, ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.
2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும். கிராமங்களில் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி, கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.
எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும். அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும். இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும். ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.
நன்றி: தினமணி
இந்தியாவின் இரண்டு முகங்கள்
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கல்வித்துறை தனியாரிடமும் அரசியல்
வாதிகளின் கைகளில் இருக்கும் வரை
உங்கள் சிந்தனை உயர்ந்த சிந்தனை
யாகவே இருக்குமேயல்லாமல் நடை
முறைச்சாத்தியமாக மாட்டாது.
Post a Comment