மலேசியாவின் ராஜபக்ஷ நஜீப் டன் ரசாக்

Thursday, February 11, 2010


மலேசிய பிரதமர்


வசந்தகுமார் கிருஷ்ணன்


கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்
மலேசிய நாட்டின் இந்து உரிமை நடவடிக்கை குழு (இன்ட்ராப்) தலைவரும், மலேசிய இந்தியன் குரல் அமைப்பின் ஆலோசகருமான வசந்தகுமார் கிருஷ்ணன் பங்கேற்றார்.

2 ஆண்டுகள் சிறையிலும் பின்னர் வீட்டுக்காவலிலும் இருந்த அவர், முதல்முறையாக வெளிநாட்டு பயணமாக கோவைக்கு வந்திருந்தார். சிறைவாசத்துக்குப்பின் தான் பங்கேற்கும் முதல் மாநாடு தமிழர் பாதுகாப்பு மாநாடு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இனி அவரின் நேர்முகம்:

கேள்வி: இன்ட்ராப் இயக்கம் தோன்றியது ஏன்?

பதில்: மலேசிய நாட்டில் இந்து கோயில்கள் குறிப்பாக தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்ட வருகிறது. இதை தடுக்கவே இன்ட்ராப் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

கேள்வி: மலேசியாவில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது?

பதில்: தமிழர்களின் வளர்ச்சியை மலேசிய அம்னோ கூட்டணி அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியை தடுத்துவிடலாம் என எண்ணி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களுக்கு மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.

கேள்வி: தமிழை குறிவைத்து தடைபோடுதற்கான காரணம் என்ன?.
பதில்: தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவி்ட்டால், அரசியல் ரீதியாக தமிழர்கள் அதிகாரத்துக்கு வருதவதை தடுத்துவிடலாம் என சூழ்ச்சியுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.

கேள்வி: மலேசிய அரசியல் சாசனங்களில் தமிழர்கள் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: மலேசிய அரசியல் சாசன சட்டம் பிரிவு 8-ன்படி மலாய், சீனர், இந்தியர்கள் என அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பிரிவு 12-ன்படி கல்வியில் மூன்று மொழிகளுக்கும் (மலாய், சீனம், தமிழ்) சமஉரிமை
வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் மதிக்காமல் தமிழர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறது மலேசிய அரசு.



கேள்வி: தமிழ் கல்வியை இருட்டடிப்பு செய்ய யார் காரணம்?

பதில்: மலேசிய கல்வி அமைச்சர் தான் முக்கிய காரணம். அதற்கு துணையாக இருப்பது மலேதிய பிரதமர் நஜீப் டன் ரசாக்.

கேள்வி: அடுத்து என்ன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்: தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட 1 லட்சம் பேரில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். எதிர்வரும் மே மாதம் 2-ம் தேதி 1 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியை கோலாலம்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்.

கேள்வி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மலேசிய பிரதமர் பங்கேற்பது குறித்து?...
பதில்: இலங்கையில் ஆயுதம் ஏந்தி தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் ராஜபக்ஷ ஈடுபட்டு வருகிறார். மலேசியாவில் சட்டத்தை தந்திரமாக வளைத்து தமிழ் இன அழிப்பில் மலேசிய பிரதமர் ஈடுபட்டு வருகிறார். மலேசிய ராஜபக்ஷ என அவரை குறிப்பிடலாம்.

உலகத் தமிழ் மாநாட்டுக்கு வரும் அவரிடம் தமிழ் ஊடக நண்பர்கள் இரு கேள்வியை கேட்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் தமிழர் உரிமையை ஏன் பறிக்கிறீர்கள்?, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் திட்டமிட்டு அழிப்பது ஏன்?. என ஊடக நண்பர்கள் அவசியம் கேட்க வேண்டும். தமிழை திட்டமிட்டு அழிக்கும் மலேசிய பிரதமரை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என அவருடன் வரும் தமிழ் தலைவர்களிடமும் கேள்வி எழுப்புங்கள்.

கேள்வி: உங்களது வருங்கால திட்டம் என்ன?

பதில்: இன்ட்ராப் நடத்திய போராட்டத்தால் தமிழர்கள் விழிப்புணர்வு அடைந்தனர். இதனால் 2008-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மொத்தமுள்ள 13 மாநிலங்களில் 5 மாநிலங்களை சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக எதிர்கட்சி கூட்டணி கைப்பற்றியது. அடுத்து வரும் தேர்தலில் சட்டப்பேரவை அல்லது எம்.பி. தொகுதிகளில் எதிர்கட்சி கூட்டணியில் இன்ட்ராப் தலைவர்கள் களம் இறங்குவார்கள். தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்றத்திலும் எங்களது குரலை பதிவு செய்வோம் என்றார்.

1 comments:

venkat said...

மலேசிய தமிழர்கள் மட்டுமின்றி உலகத்தில்உள்ள அத்தனை தமிழர்களுக்கும் சோதகனைக் காலம் தான் ஏன் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இருண்டகாலம் தான்.