லட்சம் பேருக்கு விருந்து!

Monday, February 15, 2010

தினமணி கதிரில் 14.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்


திருவிழா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் உண்டாகும்.

அதிலும் நாடு முழுவதும் பரவியிருக்கும் கிராமவாசிகள் ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் கூடி திருவிழா கொண்டாடினால் எப்படி இருக்கும்? நேரடியாக சென்று பார்த்தால், அனுபவித்தால் தான் அந்த சந்தோஷத்தை உணர முடியும்.


அப்படிப்பட்ட ஆச்சரியமளிக்கும் திருவிழா நடப்பது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மெய்ஞ்ஞானபுரம் கிராமத்தில்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அசனத் திருவிழா பிரசித்தி பெற்றது. மெய்ஞ்ஞானபுரத்தில் உள்ள பரி. பவுலின் ஆலயத்தில் 163 ஆண்டுகளாக இத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.



இந்தியாவிலேயே உயரமான கட்டடங்களுள் ஒன்றாக (192 அடி உயரம்) விளங்கி வருகிறது இந்த பரி. பவுலின் தேவாலயம். இது கட்டிமுடிக்கப்பட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் கோயில் பிரதிஸ்டை மற்றும் அசனத் திருவிழாவாக இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இத் திருவிழா நடைபெறும். முதல் நாளில் ஆலய பிரதிஸ்டை பண்டிகையும், மறுநாளில் அசனத்திருவிழாவும் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.

இந்த தேவாலயம் கட்டி முடிக்கப்பட்ட நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் அசனப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. மும்பை, பெங்களூர், புதுதில்லி, ஹைதராபாத், சென்னை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இந்த ஊரின் மண்ணின் மைந்தர்கள் தங்களது குடும்பத்துடன் அசனப் பண்டிகையின்போது இக் கிராமத்தில் கூடுகிறார்கள்.

தேவாலய வளாகத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட பந்தலில் 1,000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அமர்ந்து இரவு முழுவதும் காய்கறி வெட்டுவார்கள். விடியற்காலம் 3 மணிக்குள் காய்கறிகளை வெட்டிவிட்டு மீண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்லும் மக்கள், புத்தாடைகளை உடுத்திக்கொண்டு 4 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனையில் பங்கேற்பார்கள்.

சிறப்பு ஆராதனை முடிந்ததும் காலை 6 மணி முதல் சமையல் பணி துவக்கப்படும். இதில் ஆண்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து சாப்பாடு மற்றும் சாம்பாரை தயார் செய்வார்கள். 100 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் சமையல் செய்யும் அளவிலான அண்டாக்கள் உதவியுடன் சாப்பாடு தயார் செய்யப்படும். அதேபோல பெரிய அண்டாக்களில் சாம்பாரும் தயார் செய்யப்படும்.

மாலை 4 மணிக்குள் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு, சாம்பார் தயார் செய்யப்படும். இவ்வளவு பெரிய அளவுக்கு சமையல் செய்தாலும் யாருக்கும் ஊதியம் இல்லை என்பது ஆச்சரியப்படவைக்கும் விஷயம். கோடீஸ்வரர் முதல் குடிசைவாசி வரை ஆலய வளாகத்தில் தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

இந்த ஆண்டு 147 மூட்டை அரிசி, 10 மூட்டை பருப்பு, கத்தரி, உருளை, தக்காளி, காரட் போன்ற காய்கறிகள் டன் கணக்கில் கொண்டுவரப்பட்டு சமையல் செய்யப்பட்டன. அசன விருந்து முடிந்ததும் வீடுகளுக்கு வந்திருக்கும் உறவினர்களை உற்சாகப்படுத்த இரவு 11 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர் பொதுமகமை சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினர்தான் அசன விழாவுக்கு முழுப்பொறுப்பு.

பொதுமகமை சங்கத் தலைவரை தேர்ந்தெடுப்பது ஊர் பொதுமக்கள். ஒவ்வொரு ஆண்டும் அசனத் திருவிழா முடிந்த மறுநாள் ஊர்க் கூட்டம் நடைபெறும். இதில் வாக்கெடுப்பு முறையில் ஊர்த் தலைவர், செயலர், துணைத் தலைவர், பொருளாளர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊர்த் தலைவர் ஜெ.தனசேகரிடம் பேசினோம். ""160 ஆண்டுகளுக்கு முன்பு பனைமரங்களும், முட்புதர்களும் நிறைந்த ஊரான மெய்ஞ்ஞானபுரத்தை, அழகான நேர்த்தியான தெருக்களுடன் வடிவமைக்க காரணமாக இருந்தவர் ஆங்கிலேய மிஷனெரியான ஜான்தாமஸ். இங்கிலாந்தின் வேல்ஸில் பிறந்த அவர், 1838-ம் ஆண்டு மெய்ஞ்ஞானபுரம் வந்தார்.

இந்த ஊரில் சுமார் 40 ஆண்டு காலம் தங்கியிருந்து, இறை பணி, கல்விப்பணி, சமூகப் பணி செய்தார். கல்வி நிறுவனங்களை துவக்கி படித்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினார். அதோடுமட்டுமன்றி வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய தேவாலயத்தை கட்டினார்.

இங்கிலாந்து நாட்டின் கென்ற் மாகாணத்தில் உள்ள குட்னெஸ்டோன் என்னும் ஊரில் உள்ள தேவாலயத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இந்த தேவாலயம். 1847-ம் ஆண்டு நவம்பரில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆண்டு 2 ஆயிரம் பேருக்கு அசன விருந்து அளிக்கப்பட்டது.

ஆலயத்தில் உட்பகுதியில் 8 பிரம்மாண்ட தூண்கள் உள்ளன. கோதிக் கட்டட கலையம்சத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கோபுரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 7 அறைகள் உள்ளன. 7 வது அறையில் இருந்து பார்க்கும்போது திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய ஊர்களை காண முடியும். ஆலயத்தில் இருக்கும் கின்னாரம் (ஹார்மோனியம்) 1858-ல் வாங்கப்பட்டது. ஆலயத்தின் கடிகாரம் இங்கிலாந்தில் இருந்து தான் கொண்டுவரப்பட்டது. 5 அடி விட்டம் கொண்ட இக் கடிகாரம் இன்று வரை இனிய ஓசை குறையாமல் ரிங்காரமிட்டு வருகிறது'' என்றார்.


நன்றி தினமணி

0 comments: