தினமணி கதிரில் 28.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்
மலேசியாவில் மக்கள்புரட்சியை ஏற்படுத்தி அரசு பதவியை கைப்பற்றிய முதல் தமிழர். அந்நாட்டின் சுதந்திர வரலாற்றில் உயர்பதவிக்கு வந்த முதல் தமிழர் என்ற முத்திரையை பதித்தவர். குடும்பம், அரசியல், பண பலம் உள்ளிட்ட எவ்வித பின்புலமும் இன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அந்தப் புரட்சித் தமிழர். விடுதலைப்புலிகளின் முதல்நிலை தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தவர். மலேசிய தமிழர்களால் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல்கொடுத்து வருபவர். அவர் தான் பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி.நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக இருக்கும் ராமசாமி, இப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். கோவையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்திருந்தார் ராமசாமி. கோவையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை பேட்டிக்காக அணுகினோம்.எளிமையான உடையில் சாதாரண மனிதனைப் போல காட்சி... அவரிடமோ விசாலமான பார்வை, தொலைநோக்கு எண்ணம் பளிச்சிட்டது. இனி அவரிடம் பேசியதிலிருந்து..
அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான், மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன். மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன். இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன். ஆனாலும், அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை. நேரு, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன். மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.
உங்களது வெற்றிக்கு பின்புலம் என்ன?
2008-ல் மலேசியாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பினாங்கு மாநிலத்தில் பத்துக்காவா மக்களவை தொகுதியிலும், பிராய் சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு இரு இடங்களிலும் வெற்றி பெற்றேன். நான் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் கோசுங்குனை 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நான் வெற்றி பெறுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. எங்களது எதிர்க்கட்சி கூட்டணிக்கு மலாய், சீனர்கள், தமிழர்கள் ஆதரவு அதிகரித்ததால் மொத்தமுள்ள 13 மாநிலங்களில் சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக 5 மாநிலங்களைக் கைப்பற்றினோம்.
அடுத்த இலக்கு என்ன?
அடுத்து இரு ஆண்டுகளுக்குள் வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியை நிச்சயம் பிடிப்போம். அங்கு ஆட்சியை பிடிக்க இப்போது எடுத்த வாக்குகளைவிட 10 சதவீதம் கூடுதலாக பெற்றால் போதுமானது. மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுதான் இதற்கு காரணம்.5-வது ஈழ விடுதலைப் போராட்டம் சாத்தியமா?ஆயு தம் தாங்கி போராடுவது கடினமான விடுதலைப் போராட்டம் தான். என்னைப் பொருத்தவரை அரசியல் ரீதியான போராட்டம்தான் சிறந்தது. அதற்காகத்தான் நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற அரசியல் ரீதியான, ராஜதந்திரரீதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசு சாத்தியமா? தனி ஈழம் சாத்தியமா?
ஆப் பிரிக்க நாடான ஈரிடெரியா என்னும் நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கம் நசுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப்பின் அண்மையில் விடுதலைப் பெற்றது. இந்தோனேசியாவில் இருந்து ஈஸ்ட் தைமூர் பிரியும்போதும் பல சிக்கல்களை எதிர்கொண்டது. எனவே, இலங்கையில் இது சாத்தியமில்லை என்பதை எப்படி கூற இயலும்.இலங்கையில் இப்போதுள்ள தமிழர்களால், தமிழர் கட்சிகளால் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க இயலாது.வெளியில் வாழும் தமிழர்களால் தான் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற முடியும். அதற்காகத் தான் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க முயற்சி நடந்து வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பர்தேஸ் மாநாட்டை புறக்கணித்து ஏன்?
இலங் கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இந்திய அரசின் நடவடிக்கைகளும் ஒன்று. எனவே, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் சரியான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளாதவரை இதுபோன்ற மாநாடுகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்தேன்.
கோவை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் எப்படி செயல்படும்?
உல கம் முழுவதும் 80 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அனைத்து நாடுகளிலும் 2-ம் தர குடிமக்களாக பாதுகாப்பின்றி வாழ்கின்றனர். தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சந்தித்து அனைத்து நாடுகளுக்கு இடையேயும் உறவுப் பாலம் அமைக்கும் பணியை உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் செய்யும். எந்த நாட்டில் தமிழர்களுக்கு பிரச்னை என்றாலும் இந்த அமைப்பு குரல் கொடுக்கும். தமிழகத்தில் வேறு தமிழ் தலைவர்களை சந்திக்கும் எண்ணம் உண்டா?அடுத்த சில மாதங்களுக்குப்பின் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வைகோ, தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பிற தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
மலேசியாவில் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களுக்குக செய்துள்ள நன்மைகள் எவை?
மலேசிய அரசின் நீர் வாரிய தலைவர், பினாங்கு வளர்ச்சி குழுமம், துணை முதல்வர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனது அதிகாரத்தின்கீழ் வரும் அரசு டெண்டர்கள் வரும்போது இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பெயர் பட்டியலில் இல்லையெனில் நான் கையொப்பம் இடுவதில்லை. மலேசியாவில் இப்போது தான் தமிழர்கள் நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோர முடிகிறது. இதுவரை 3 பெரிய தொழில்நிறுவனங்கள் துவக்க அனுமதி அளித்துள்ளேன். மலேசியாவில் வாழும் 16 லட்சம் தமிழர்களில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு குடியுரிமை இல்லை. அதில் பலருக்கு குடியுரிமை பெற்று தந்துள்ளேன். தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறேன்.
மலேசியாவில் தமிழ்க் கல்வியின் நிலை பற்றி...பதில்: தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை 1,500-ல் இருந்து 523 ஆக குறைக்கப்பட்டுவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் இலக்கியப் படிப்பின் முக்கியத்துவத்தை மலேசிய அரசு குறைத்துவிட்டது. தமிழர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க மலேசிய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார். தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சுயமரியாதையுடனும், சமஉரிமையுடனும், மனிதனாகவும் மதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது கொள்கை என சற்று கம்பீரமான குரலுடன் பேட்டியை முடித்தார் பேராசிரியர் ராமசாமி.
உலகம் முழுவதும் தமிழர்களால் அறியப்பட்ட பேராசியர் ராமசாமியின் பூர்வீகம் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் தான என்பது ஆச்சரியமான விஷயம். இப்போதைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகேயுள்ள முத்துக்கவுண்டன்வலசுதான் ராமசாமியின் அப்பாவின் கிராமம். அம்மாவுக்கு அதே பகுதியில் உள்ள இலுப்புக்கிணறு கிராமம் தான். ராமசாமியின் பெற்றோர் வறுமை காரணமாக மலேசியாவில் குடியேறினர். மலேசியாவில் பிறந்த ராமசாமி, அங்கேயே பிறந்து வளர்ந்த கலையரசியைத் திருமணம் செய்துகொண்டார்.கலையரசிக்கு நாமக்கல்தான் பூர்வீகம்.
கோவை வந்த ராமசாமி, அவரது மனைவி கலையரசி இருவரும் இலுப்புக்கிணறு கிராமத்துக்குச் சென்று தனது முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை குதுகலத்துடன் சுற்றிப் பார்த்தனர். தனக்கு மைத்துனர் தங்கராஜின் வீட்டில் மதிய உணவு உண்டுவிட்டு, தனது முன்னோர்கள் தரிசித்த 500 ஆண்டு பழமையான கோயிலையும் சுற்றிப் பார்த்தனர் ராமசாமி-கலையரசி தம்பதியினர்.
நன்றி: தினமணி
1 comments:
மிக விரிவான அலசல். நன்றாக இருக்கிறது நண்பரே.
வாழ்த்துக்கள்.
Post a Comment