ஆயுதத்தைத் தீட்டுங்கள்!

Thursday, March 10, 2011

தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம் 
எந்தக் கட்சி யாருடன் கூட்டணி சேரும்? எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்? என தமிழக வீதிகளில், திண்ணைகளில், மரத்தடிகளில் கூடும்  மனிதர்களின் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
 எந்த ஒரு காட்சி ஊடகத்தையோ அல்லது அச்சு ஊடகத்தையோ பார்த்தாலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய செய்திகள்தான் பிரதான இடத்தைப் பிடித்து வருகின்றன.
 இதையெல்லாம் பார்த்ததும் மக்களில் பலருக்குத் தேர்தல் திருவிழா நெருங்கிவிட்டதாக எண்ணம். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் கிடைத்த அனுபவம் தான் இதற்குக் காரணம்.
 ஆனால், அரசியல்வாதிகளுக்கோ போர்க்களம் நெருங்குவதைப் போன்ற எண்ணம். சுதந்திரத்துக்குப்பின் இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழகத் தேர்தல் களம் கடுமையாகியுள்ளது. 
ஆயுதத்தைத் தீட்டுங்கள்!

 இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தால் தங்கள் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பரவலான கருத்து மேலோங்கிவிட்டதால் இரு திராவிடக் கட்சிகளும் தேர்தல் களத்தில் கடுமையாகப் போராட, கூட்டணியைப் பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன.
 கடந்த 40 ஆண்டுகளாக மது, பிரியாணி கொடுத்து குறிப்பிட்ட சில ஆயிரம் வாக்குகளை விலைக்கு வாங்கி வந்த அரசியல்வாதிகள், இப்போது தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
 விலைமதிக்க முடியாத வாக்குகளை, சில நூறு அல்லது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையமே நோட்டீஸ் அடித்து விழிப்புணர்வு செய்ய வேண்டிய அளவுக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிலைமை மோசமாகிவிட்டது.
  இதுவரை நடந்த தேர்தல் முடிவுகளைப் புரட்டிப்பார்த்தால் வாக்களிப்பவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள்தான்.
 ஐந்து ஆண்டுகளில் அறுவடை செய்த கொள்ளைப் பணத்தை, ஒரே ஒருமுறை விதைத்தால் போதும் இருபோகம், முப்போகம் அல்ல, முன்னூறுபோகம்கூட அறுவடை செய்துவிடலாம் என்ற அசட்டுத் தைரியம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது.
 வாக்குகளை விலைக்கு வாங்கும் தந்திரம் இன்று, நேற்று அல்ல. 40 ஆண்டுகால புற்றுநோயாக தமிழகத் தேர்தல் களத்தில் இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஓட்டுக்கு 2 ரூபாய் விலை கொடுத்து வாங்கிய அரசியல்வாதிகள், இப்போது 2,000 ரூபாய்க்கு வாங்க முயற்சிக்கின்றனர். இந்த அவலநிலைக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணமல்ல, மக்களும்கூட பொறுப்புதான்.
 ஊழல் செய்த கட்சியை ஒரு தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவதும், அதைமறந்து அடுத்தமுறை வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதும் தமிழக மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஒரு தேர்தலில் ஊழல் கட்சி என முகத்திரை கிழிபட்ட கட்சி, அடுத்த முறை பரிசுத்தமானதாகிவிடுகிறது.
 பாவம்! மாறிமாறி ஊழல் கட்சிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத்  தொடர்ந்து கிடைப்பது ஏமாற்றம். வரும் தேர்தலிலாவது மக்கள் விழித்துக்கொள்வது அவசியம்.
  தமிழகத்தின் எதிர்காலம் கருதி, தங்களது சந்ததியினரின் எதிர்காலம் கருதி, தொகுதியின் நன்மை கருதி நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை.
தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் நல்லவர் இல்லையெனில் வாக்குச்சாவடிக்குச் சென்று "யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' (49 ஓ) என்ற கருத்தையாவது பதிவு செய்துவிட்டு வரலாம். நமது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்கிறோமோ? இல்லையோ? குறைந்தபட்சம் கள்ள ஓட்டுப் போடுவதையாவது தடுக்கலாம்.
 தமிழகத்தில் வீழ்ந்து கிடக்கும் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டுமெனில் கீழ்த்தட்டு முதல் மேல்தட்டு வரையிலான ஒட்டுமொத்த மக்களும் நினைத்தால்தான் சாத்தியம். தலைவர் படத்தைப் பார்த்து மயங்கியோ, பணத்துக்கு ஆசைப்பட்டோ ஓட்டளித்தால், நீங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. உங்களின் அடுத்த சந்ததியும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள்தான் உள்ளது. அதற்குள் யோசித்து, நல்ல கட்சியை, நல்ல வேட்பாளரை ஆதரிக்காவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவதிப்படுவது நீங்களும்தான். ஏதோ ஒரு மயக்கத்தில் தவறான கட்சிக்கு ஓட்டளித்துவிட்டு, பின்னர், விலைவாசி ஏறுகிறதே? பெட்ரோல், டீசல் விலை ஏறுகிறதே? வெங்காயம் விலை ஏறுகிறதே?... எனப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.
  தேர்தல் நெருங்குகிறது. ஆயுத்தமாகுங்கள். தேர்தல் என்பது மிகப்பெரிய போர்க்களம். இதில் வாக்கு என்பது மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கூர்மையான ஆயுதம்.
தங்களது சுயநல வெற்றிக்காகப் பணபலம், ஆள்பலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி வாக்கு என்னும் ஆயுதத்தின் கூர்மையை மழுக்குகின்றனர் சுயநல அரசியல்வாதிகள்.
  விலைமதிக்க முடியாத வாக்கு என்னும் கூர்மையான ஆயுதம் மழுங்கிக் கிடக்கலாமா?
கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் யுத்தம் (தேர்தல்) நெருங்கிவிட்டது. அரசியல்வாதிகளால் மழுக்கி வைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் ஆயுதத்தை இப்போதே தீட்டத் தொடங்குங்கள்.

0 comments: