தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
கடமையைச் செய்துவிட்டு, உரிமைக்காகப் போராடுவது தான் தொழிற்சங்கங்களின் சித்தாந்தம். ஆனால், இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. கடமையைச் சரிவரச் செய்யாமல் உரிமைக்காகத் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
ஒப்பந்த ஊழியராக இருக்கும்போது 12 மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வருத்தி உழைத்த தொழிலாளர்கள், நிரந்தரப் பணி கிடைத்ததும் 2 மணி நேரம்கூட உழைக்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த அளவுக்கு மனிதநேயம் கெட்டுவிட்டது என்பதை எண்ணும்போது மனம் வெதும்புகிறது'' என தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் தனது கருத்தை வருத்தத்துடன் பதிவுசெய்தார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள முன்னணி தொழிற்சங்கத்தில் 14 ஆண்டுகளாகப் போட்டியின்றித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அண்மையில் நடத்திய போராட்டம் தேவைதானா? என்ற கேள்வி குக்கிராமத்தில் கூட விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், தேர்தல் புறக்கணிப்பு எனப் போராட்டங்கள் நடத்துவது வாடிக்கை. ஆனால், இந்த முறை பொதுமக்கள் போராட்டம் தொடங்கும்முன்பே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரிந்துகட்டிக்கொண்டு போராடினர்.
மின்சிக்கன வாரம், வனஉயிரின வாரம், தேசிய உற்பத்தி வாரம் என ஒவ்வொரு விழிப்புணர்வுக்கும் ஒரு வாரவிழா கொண்டாடுவதுபோல இந்த ஆண்டு பிப்ரவரி கடைசிவாரத்தை "போராட்ட வாரம்' எனப் பெயர் சூட்டிவிடலாம். அந்த அளவுக்குப் போராட்டம் நடத்தி அரசு இயந்திரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால், மாநிலத்தில் பெரும்பாலான மாவட்ட ஊராட்சி அலுலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி அலுவலகங்கள் ஒருவாரமாக மூடப்பட்டன.
அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தியதால் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஒருவாரம் மூடப்படப்பட்டன.
4 நாள்களாக இரவு பகலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடினர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டத்தின்கீழ் உள்ள பணிமனைகளில் பணியாற்றும் தாற்காலிக பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள். பஸ் ஊழியர்களின் போராட்டத்தில் நியாயமான காரணம் இருப்பதை உணர முடிகிறது.
ஆட்சி முடியும் தருவாயில் போராட்டம் நடத்தினால் போகிற போக்கில் தங்களுக்கு அரசு கருணை காட்டாதா? ஆட்சி மாறிவிட்டால் தங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்குமா? அல்லது தங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறுநபர்களைப் பணிக்கு அமர்த்திவிடுவார்களோ? என அச்சப்பட்டு தாற்காலிகப் பணியில் இருப்பவர்கள் போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இருக்கிறது.
ஆனால், நிரந்தரப் பணி பாதுகாப்பான பணி, கைநிறைய ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆட்சி முடியும் தருவாயில் இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து போராட்டம் நடத்துவது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வி நடுநிலையாளர்கள் மனதில் எழும்பியுள்ளது.
காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி, ரேஷன் கார்டு கேட்டு 22 மாதங்களாக தருமபுரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் போராடியிருக்கிறார். இத்தனை வாரங்கள் கழித்து ஆட்சியரிடம் முறையிட்ட பின்னரும் அலட்சியமான பதில்தான் அவருக்குக் கிடைத்தது.
22 மாதங்களில் எத்தனை முறை வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகளை அல்லது ஊழியர்களைச் சந்தித்து முறையிட்டிருப்பார்? சரியான விவரங்களுடன் விண்ணப்பித்த ஒரு பயனாளி 22 மாதங்கள் அலைக்கழிக்கப்படுகிறார் என்றால் அரசு ஊழியர்கள் எந்த அளவுக்குக் கடமையுடன், கனிவுடன் செயல்பட்டிருக்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று.
இதேபோல எத்தனை வட்ட வழங்கல் அலுவலகங்களில் எத்தனை எத்தனை சாதாரண மக்கள் அலைகிறார்களோ? அரசு ஊழியர்களுக்கே வெளிச்சம்!.
ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவற்றுக்காக பல மாதங்களாக விண்ணப்பித்து கால்கடுக்க அரசு அலுவலகங்கள் முன்பு பல மணிநேரம் நின்றுகொண்டே காத்திருந்து, அரசு ஊழியர்களின் அலட்சியமான பேச்சை கேட்டு மனப்புழுக்கத்துடன் காத்திருக்கும் சாதாரண குடிமக்களின் எண்ணிக்கை ஏராளம், ஏராளம்.
பிளஸ் 2 தேர்வையே நிலைகுலைய வைக்கும் நிலைக்குத் துணிந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை மனசாட்சியுள்ள குடிமகன்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
ஆசிரியர்களின் போராட்டத்துக்குத் தடை விதியுங்கள் என பிளஸ் 2 மாணவர் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறி தடை ஆணை பெறும் அளவுக்கு நிலைமை விபரீதமாக மாறிவிட்டது.
இதுபோன்ற போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவுரை சொல்வது யார்? என்ற கேள்வி எழும்போது 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது இடதுசாரி கட்சியின் மூத்த தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஒருவர் சொன்ன அறிவுரை தான் நினைவுக்கு வருகிறது.
""ஒரேநேரத்தில் லட்சக்கணக்கில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டனரே? என உங்களுக்கு வருத்தம், கோபம் இருக்கலாம். ஆனால், உங்களது போராட்டத்துக்கு மக்களிடம் சிறுதுளிகூட ஆதரவு இல்லை. அரசின் நடவடிக்கையை மக்கள் நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை நீங்கள் துச்சமாக மதிக்கிறீர்கள். அரசு ஊழியர் என்றால் அரசு சார்பில் மக்களுக்குச் சேவை செய்பவர் என்று பொருள். ஆனால், அரசு ஊழியர்கள் நேர்மாறாக நடக்கின்றனர். உங்களது சங்கங்களில் இருக்கும் ஊழியர்களை மக்களுக்குச் சேவையாற்ற முதலில் கற்றுக்கொடுங்கள். மக்கள் ஆதரவு உங்களுக்கு அதிகரித்துவிடும். மக்கள் ஆதரவு இல்லாத எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற முடியாது''
போராடுங்கள். போராட வேண்டாம் என தடுப்பது ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் செயல். ஆனால், போராட்டம் நடத்த இது தகுந்த காலம்தானா என்பதைச் சிந்தித்துப் போராடுங்கள்.
0 comments:
Post a Comment